சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமான ஆட்சி என நிரூபித்த அனுர அரசு !
-இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச் செயலாளர் சட்டத்தரணி நிதான்சன் காட்டம்…!
( வி.ரி.சகாதேவராஜா)
இனமதவாதமற்ற அரசு எனக்கூறி ஆட்சிபீடமேறிய அனுர அரசாங்கம் இன்று சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமான ஆட்சி என நிரூபித்துள்ளது . இந்த நாடும் சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமான நாடுதான் என்பதை மீண்டும் நிருபித்துள்ளது.இதற்கு திருமலை புத்தர் சிலை விவகாரம் கட்டியம் கூறி நிற்கிறது.
இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச் செயலாளர் சட்டத்தரணி அருள்.நிதான்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
மூவின மக்களுக்குமான அரசு எனத் தெரிவித்து ஆட்சியில் ஏறிய அரசு இன்று இனவாத ரீதியாக இனவாதிகளின் செயல்பாடுகளுக்கு அடிபணிந்து நிற்பது என்பது திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இன்று சிங்கள மக்களை மாத்திரம் திருப்திபடுத்த வேண்டும் எனும் நோக்கில் தமிழரின் தாயகம் எனவும் அதன் தலைநகர் எனவும் வர்ணிக்கப்படும் திருகோணமலையில் புதிய புத்தர் சிலைக்கு பாதுகாப்பு அமைச்சரே இஷ்டத்துக்கு பாதுகாப்பு அளித்து நிறுவியதானது தமிழ் இனத்தின் அஹிம்சை அரசியல் போராட்டத்தின் ஆணிவேருக்கான காரணம் என்னவென்பதை இன்று உணர்த்த வழிகோலி உள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் தமிழர் அபிலாசைகளை நிறைவேற்றுவோம் என கூறி வடகிழக்கில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்ற கட்சி இன்று அடாவடியாக தமிழர் இடத்தை சூறையாடுகின்றபோது வடகிழக்கில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் முகநூலில் சில்லறை அரசியலை முன்னெடுக்கின்றனர்
எமது மக்களின் மீதான இவ்வாறான ஆக்கிரமிப்புக்கு பலத்த கண்டனத்தை வெளியிடுவதோடு இந்த அரசு இனவாதிகளின் பின்னால் ஒழிந்து கொண்டு நடுகின்றமைக்கு வெட்கப்பட வேண்டும் தெற்கை திருப்திப்படுத்த நினைத்து வடகிழக்கு மக்களையும் மேற்குலக நாடுகளையும் நம்ப வைத்து ஏமாற்றுகின்றது எனவும் குறிப்பிட்டார்
