• வி.ரி. சகாதேவராஜா 

அன்னாரின் 31 ஆம் நாள் அந்தியேட்டி கிரியைகள் இன்று 19 ஞாயிற்றுக்கிழமை களுதாவளை இல்லத்தில் நடைபெறுகிறது.

அதையொட்டிய நினைவுக்கட்டுரை இது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் களுதாவளையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி விவசாய பணிப்பாளர் அமரர் த. கனகசபை தனது 86 வது வயதில் மறைந்து ஒரு மாதம்.

நவீன விவசாய முறைகளைப் பயன்படுத்தி கிழக்கு மாகாண ஏழை விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றியவர் தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை. மட்டக்களப்பு களுதாவளையில் ஆலய தலைமை வண்ணக்கர் தன்மன்பிள்ளை – வாலயப்பிள்ளை தம்பதிகளுக்குப் புதல்வனாக 18.03.1939 ஆம் ஆண்டு பிறந்தார்.

 ஆரம்பக்கல்வியை களுதாவளை இராமகிருஸ்ண வித்தியாலத்தில் கற்றார். இடைநிலைக் கல்வியை கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தில் ஆங்கில மொழி மூலம் பெற்றார். தொடர்ந்து உயர்தரக் கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியில் பெற்றார். இக் காலப்பகுதியில் இவரது விவசாயம் சம்பந்தமான கட்டுரைகள், கவிதைகள் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்தார். 

எஸ்.எஸ்.சி பரீட்சையில் திறமையாகச் சித்தியடைந்தார். 

மேற்படிப்பை கண்டி பேராதனையில் அமைந்திருந்த சர்வதேச தரத்திலான விவசாயக்கல்லூரியில் மேற்கொண்டு தேறினார். பயிற்சி முடிந்து இரு மாதங்களில் தமது 20வது வயதில் நுவரெலியா உருளைக்கிழங்கு பண்ணையின் முகாமையாளராகப் பொறுப்பு வாய்ந்த தொழிலை 1959 ஆம் ஆண்டில் பெற்றார்.

 இனக்கலவரம் தலைதூக்கிய காலம் இங்கு நூற்றுக்கு மேற்பட்ட தாய்மார்களும், யுவதிகளும் தொழில் புரிந்தனர். அனேகமானோர் சிங்களவர்கள், மிகவும் ஏழைகள், சம்பளமும் குறைவு. கடும் குளிரில் அதிகாலையில் இருந்தே தொழிற்படுவார்கள். அவர்களைச் சிறிது சிறிதாக சேமிக்கப் பழக்கினார். காலில் செருப்பு அணியவும், கையில் கைக்கடிகாரம் அணியவும், நவீன ஆடைகள் உடுக்கவும் பழக்கினார். இக் காலப்பகுதியில் ஜேர்மனி சென்று உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையில் பயிற்சி பெறச் சந்தர்ப்பம் கிடைத்தது.

அதனைத் தவிர்த்து தம்மாவட்டத்திற்கு சேவை செய்யும் நோக்கில் தமது கிராமம் வந்து பெற்றோருடன் இணைந்து கொண்டார். செங்கலடி, கல்முனை ஆகிய இடங்களில் விவசாயப் போதனாசிரியராக தொழில் புரிந்தார். 

1968ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டின் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுக்குச் சென்று ஆறுமாத காலம் பயிற்சி பெற்றார். அமெரிக்கா அபிவிருத்தியும், முன்னேற்றமும் அடைந்த நாடாக இருந்தது. இவருடன் 35 நாடுகளைச் சேர்ந்த 101 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் வௌ;வேறு மொழி பேசுபவர்கள் 

அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றதும் உலக வங்கியின் அனுசரனையுடனாக உலக உணவுத்தாபனம், நியாப் ஆகிய நிறுவனங்களில் இணைந்து ஏழை மக்களின் உயர்வுக்காக உழைத்தார். 2004ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டார். அமோக வாக்குகளால் வெற்றி பெற்றார். பல சவால்களுக்கு மத்தியில் 2010ஆம் ஆண்டு வரை தன்னால் ஆன சேவைகளைச் செய்தார். பலமுறை சபைக்கு தலைமை தாங்கினார். சகல உறுப்பினர்களுடனும் அமைச்சர்களுடனும் சுமுகமாகப் பழகினார்.

கடந்த 19.09.2025ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை மாலை தனது 86வது வயதில் அமரத்துவம் அடைந்தார்.

அன்னாரின் 31 ஆம் நாள் அந்தியேட்டி கிரியைகள் நாளை 19 ஞாயிற்றுக்கிழமை களுதாவளை இல்லத்தில் நடைபெறுகிறது.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா 

காரைதீவுநிருபர்