அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மல்வத்தை சந்தியில் இன்று காலை 09.30 மணியளவில் தொட்டாச்சுருங்கி வட்டை மற்றும் திருவள்ளுவர்புரம் பொது மக்களால் கவனயீர்ப்புப் போராட்டமும், ஜனாதிபதிக்கு மகஜர்கள் அனுப்பும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டமானது 1983 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளின் நிமித்தமாக தமது வாழ்விடங்கள், விவசாய நிலங்களைக் கைவிட்டு இடம்பெயர்ந்து சென்று பல வருடங்களின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட சமூகமான நிலையைத் தொடர்ந்து வருகை தந்து பார்த்தபோது தம்மிடம் ஆவணங்களும் ஆதாரங்களும் இருக்கத்தக்கதாக சுமார் 57 பேரின் விவசாயக் காணிகளை அபகரித்துள்ள நிலையிலும் அதேபோன்று மல்வத்தை திருவள்ளுவர்புரம் மக்களில்1990 களில் ஏற்பட்ட அசாதாரண நிலைகளில் இடம்பெயர்ந்து சென்ற 11 குடும்பங்களின் குடியிருப்புக் காணிகளைத் தனிநபர் ஒருவருமாக அடாத்தாக அபகரித்து ஆவணங்களும் ஆதாரங்களும் எதுவும் இன்றி விவசாயம் செய்து வருவதை அவதானித்து, பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் மற்றும் ஆளுநர் அலுவலகம் போன்றவற்றில் குறைபாடுகள் செய்தும் பல அரசியல் தலைவர்களை சந்தித்து முறையிட்டும் எதுவித தீர்வும் கிட்டாத நிலையில்,
பணபலம், அரசியல் பலத்தை வைத்து தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வந்த இந்த இரண்டு கிராம மக்களும் இணைந்து இன்றைய தினம் ஜனாதிபதியினுடைய கவனத்தை ஈர்க்கும் வகையிலே ஒரு கவன ஈர்ப்பை மேற்கொண்டதோடு ஜனாதிபதியினுடைய கவனத்திற்காக தங்களுடைய முறைப்பாடுகளை கடிதங்களாக அனுப்பி வைக்கின்ற போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள்.


இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், அதேபோன்று இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்க கூடிய இன்றைய போராட்டத்தை ஒழுங்கமைத்திருந்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர்செயற்பாட்டாளர் காந்தன் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் உள்ளிட்ட பல செயற்பாட்டாளர்களும் இணைந்து இன்றைய போராட்டத்தை முன்னெடுத்ததோடு கடிதங்களை அனுப்புகின்ற பணியையும் மேற்கொண்டிருந்தார்கள்.