போதைப்பொருள் வியாபாரியை கைது செய்த பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவு
பாறுக் ஷிஹான்
நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரியை அம்பாறை பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
இன்று (9) அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகம்புர பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் கைதானார்.
அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவர் சிறிது காலமாக ஈசி பண பரிமாற்றம் மூலம் போதைப்பொருட்களை விநியோகித்து வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
கைதான சந்தேக நபர் வசம் இருந்து 3.500 கிராம் ஹெரோயின் மற்றும் 2.100 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைத்தொலைபேசி போதைப்பொருளை விநியோகிக்க பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அசேல கே. ஹேரத் கூறுகையில்
கைதான சந்தேக நபர் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விநியோகிக்க ஒரு புதிய முறையைப் பயன்படுத்தினார்.அதாவது களிமண்ணை எடுத்து அதை சதுரங்கள் மற்றும் வட்டங்களாக வடிவமைத்து அவற்றிற்குள் ஹெரோயின் பாக்கெட்டுகளை வைத்து ஈயத் தாளில் சுற்றி விற்பனை செய்துள்ளார்.அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய அம்பாறை நவகம்புர பகுதியைச் சேர்ந்தவராவார்.
இச்சுற்றிவளைப்பானது கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர மற்றும் அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல ஆகியோரின் பணிப்புரையின் பேரில் அம்பாறை மாவட்ட பதில் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமார தலைமையில் அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்ரமாராச்சி அம்பாறை ஊழல் தடுப்பு பிரிவு உப பரிசோதகர் உள்ளிட்ட பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








