கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அழகான நுழைவாயில்; பரோபகாரி பத்மநாதன் நடேசன் திறந்து வைப்பு

( வி.ரி. சகாதேவராஜா)

சம்மாந்துறை வலயத்திலுள்ள ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கான பிரதான நுழைவாயில் திறப்பு விழாவும் வலயத்தில் முதலிடம் பெற்ற சாதாரணதர மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் வெகு விமரிசையாக நேற்று முன்தினம் நடைபெற்றன.

“பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளையின்” பூரண அனுசரணையுடன் பாடசாலையின் அதிபர் சோ. இளங்கோபன் தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவில் “பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளையின்” ஸ்தாபகர் பத்மநாதன் நடேசன் லண்டனில் இருந்து வந்து விசேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ் . மகேந்திரகுமார் , சம்மாந்துறை வலய கல்விப்பணிமனையின் பிரதிக்கல்வி பணிப்பாளர்களான யசீர் அரபாத், பி.பரமதயாளன், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா மற்றும் பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளையின் அங்கத்தவர்கள் ஆலய அறங்காவலர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

பரோபகாரி பத்மநாதன் நடேசன் கோரக்கர் கிராமத்திற்கும் பாடசாலைக்கும் செய்த மகத்தான சேவையைப் பாராட்டி பல அமைப்புகள் அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா பாடிக்கௌரவித்தனர். கூடவே வலயக்கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார் மற்றும் சிரேஸ்ர ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சேவைக்காக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த கபொத. சாதாரண தரப் பரீட்சையில் சம்மாந்துறை வலயத்தில் முதலிடம் பெற்ற கோரக்கர் பாடசாலை மாணவர்கள் பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் வி.மோகன், ஆலய தலைவர் கி.சசிகரன், செயலாளர் எஸ். தினேஷ்குமார், பொருளாளர் எஸ்.அழகுதுரை மற்றும் கே.கனகராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.