கடலரிப்பு அனர்த்தம் தொடர்பில் உடனடி நடவடிக்கை
பாறுக் ஷிஹான்
கல்முனை கடற்கரைப் பிரதேசத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அனர்த்தம் மற்றும் கடற்கரைப் பாதுகாப்பு கல் அணை
வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் சமூக வலுவூட்டல் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் கவனத்திற்கு கொண்டு வந்ததுள்ளனர்.
இதனையடுத்து நம்பிக்கையாளர் சபையின் வேண்டுகோளின் பேரில், கடலரிப்பு அபாயத்தை நேரில் பார்வையிட்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு செவ்வாய்க்கிழமை (12) பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்னாயக்க ஆகியோர், கரையோர பாதுகாப்புத் திணைக்கள பொறியியலாளர் துளசிதாசன் சகிதம் கல்முனை கடற்கரைப்பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது அசமந்தமாக செயற்பட்டிருந்த சம்பந்தப்பட்ட கொந்தராத்துகாரர் பணிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொறியியலாளர் தெரிவித்தார். மேலும், காலத்தை வீணாக்காமல் மாற்று வழிமுறைகள் மூலம் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதியமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினர்.
இந்நிகழ்வில், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுடன் இப்பிரதேச மீனவர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து கடலரிப்பு அபாயத்தின் தற்போதைய களநிலவரங்களை விளக்கினர்.





















