வீதியில் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த கல்முனை மாநகர ஊழியரின் முன்மாதிரி
(அஸ்லம் எஸ்.மெளலானா)
தன்னால் கண்டெடுக்கப்பட்ட பணப்பை (Money purse) ஒன்றை கல்முனை மாநகர சபை ஊழியர் ஒருவர், உரிய நபரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கல்முனை மாநகர சபை ஊழியரின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளரான எம்.எம்.எம். றிஸ்வான் வியாழக்கிழமை (03) கல்முனை ஸாஹிராக் கல்லூரி வீதியில் கடமை நிமித்தம் சென்று கொண்டிருந்த போது, பெண்கள் பயன்படுத்தும் money purse ஒன்று வீதியில் கிடப்பதைக் கண்டெடுத்து, உடனடியாக மாநகர சபைக்கு விரைந்து, மாநகர ஆணையாளரிடம் அதனை ஒப்படைத்துள்ளார்.
அதையடுத்து, குறித்த பணப்பைக்குரிய குடும்பப் பெண், மாநகர ஆணையாளரின் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, குறித்த மாநகர சபை ஊழியரான எம்.எம்.எம். றிஸ்வானின் பொற்கரங்களினாலேயே அதனை கையளிக்கச் செய்தார் ஆணையாளர்.
சாய்ந்தமருது ஒஸ்மன் வீதியைச் சேர்ந்த இப்பெண், பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஒரு தொகைப் பணத்தையும் கைத்தொலைபேசியையும் இந்தப் பையில் வைத்து எடுத்துச் சென்றதாகவும் அதனுள் தேசிய அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்குப் புத்தகம் எனபனவும் இருந்ததாகவும் அது தவறிக் காணாமல் போய், தேடிக் கொண்டிருந்த நிலையிலேயே தகவல் தரப்பட்டு, மாநகர சபை காரியாலயத்திற்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனது பணப்பையை மீட்டுத்தந்த ஊழியருக்கு ஆனந்தக் கண்ணீருடன் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன் குறித்த ஊழியருக்கு அன்பளிப்பு வழங்கவும் முற்பட்டார். எனினும் அந்த ஊழியர் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
சில வருடங்களுக்கு முன்னர் இந்த மேற்பார்வையாளரான எம்.எம்.எம். றிஸ்வான், தங்க ஆபரணங்கள் மற்றும் பெருந்தொகைப் பணம் அடங்கிய பொதியொன்றைக் கண்டெடுத்து, உரிய குடும்பத்தினரிடம் ஒப்படைத்தமைக்காக மாநகர சபை நிர்வாகத்தினரால் விஷேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார் என்பதும் அது பி.பி.சி. உலக செய்திச் சேவையின் கவனத்தை ஈர்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நேர்மையான ஊழியர்கள் தமது மாநகர சபையில் இருப்பதையிட்டு பெருமிதமடைவதாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தார்.