கல்முனையில் தமிழ் சிவில் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்ட நல்லிணக்கத்திற்கான மாபெரும் தன்சல்; பெருமளவானோர் பங்கேற்பு!

-அரவி வேதநாயகம்-

கல்முனை தமிழ் சிவில் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் தன்சல் நிகழ்வு நேற்று (28) கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.

வெசாக் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தன்சல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கடந்த 22 ஆம் திகதி தொடக்கம் இன்று (28) வரை கல்முனை தமிழ் சிவில் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தன்சல் நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்று வந்தது. தொடர்ச்சியாக குளிர்பானங்கள் அவி பொருட்கள் என்பவை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய இறுதி நாளில் அவித்த மரவள்ளி கிழங்கு, மாங்காய் சட்ணி என்பன வழங்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

அதிகளவான பொதுமக்கள் இன்றைய தன்சல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததோடு இன்றைய நாளில் 200 கிலோ கிராமுக்கும் அதிகமான மரவள்ளிக் கிழங்குகள் தன்சலுக்காக பயன்படுத்தப்பட்டது.

பல்லின மக்கள் வாழ்கின்ற நமது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், புரிந்துணர்வுக்கும் இது போன்ற நிகழ்வுகள் வழிவகுக்கும் என தாங்கள் நம்புவதாக தன்சலை ஏற்பாடு செய்திருந்த தமிழ் சிவில் அமைப்புகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிருவாக உரிமை மீட்பு போராட்டத்தில் பங்குபற்றியிருந்த பொதுமக்களின் பங்களிப்பும் இதில் அதிகமாக இருந்தது