– கட்டப்பன்-

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; அரச காணி பங்கீடூகள் தொடர்பாக நீதீயான விசாரணை அவசியம்!

தமிழ் முஸ்லிம் அரசியல் தரப்புகளிடம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம். போட்டி போட்டுக் கொண்டு வடக்கு பிரதேச செயலகம் என்ற வாகனத்தின் மிதிபலகை வரை நின்று தமது அடுத்த கட்ட அரசியலை நோக்கி பயணிக்கின்றார்கள் அரசியல் தலைவர்கள்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் அதனை உப செயலகமாக தரமிறக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 19 பிரதேச செயலகங்கள் மாத்திரமே இருப்பதாக பொது நிர்வாக அமைச்சு, மாவட்ட செயலகம் உள்ளிட்ட நிர்வாக உயர் பீடங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், கல்முனை பிரதேச செயலாளரினால் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுகளில், அதன் நிர்வாகங்களில் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய செயற்பாடுகளை எதிர்த்து இன்றுடன் (15 ) 52வது நாளாக சிவில் அமைப்புகளாலும் பொதுமக்களாலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்ற போதிலும் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் அரசு நிர்வாகங்களுக்கு பொறுப்பான அமைச்சினால் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் உண்மைக்கு புறம்பான விவாதங்களும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

1989 ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஆரம்பிக்கப்பட்ட கரைவாகு வடக்கு தமிழ் பிரதேச செயலகம் பின்னர் 1993 ஆம் ஆண்டு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டு பிரதேச செயலகமாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனாலும் அப்போதிருந்தே முஸ்லிம் அரசியல் தலைமைகளால் திட்டமிட்டு தடுக்கப்பட்டு வந்த அதனுடைய நிர்வாக நடவடிக்கைகள் இன்று வரை தமிழர் தரப்பு அரச எதிர்ப்பு அரசியலையும் தமது அரசு ஆதரவு அரசியலையும் சாதகமாகப் பயன்படுத்தி தொடரப்படுகின்றது.

இலங்கையின் அரச நிர்வாகத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலையீடுகள் மிகவும் பாரதூரமானவை என்பதற்கு சிறந்த உதாரணமாக கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தை குறிப்பிடலாம். அமைச்சரவை அங்கீகாரம் ஒன்று வர்த்தமானி படுத்தப்படுத்தலை தடுப்பது முதல் கொண்டு அரசு அதிகாரிகளின் சுதந்திரமான செயற்பாடுகளை தடுப்பது வரை அவர்களுடைய நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன.

தமிழ் மக்களின் நியாயமான நிர்வாகக் கோரிக்கைகள் தொடர்பில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு 30 வருடங்களுக்கு மேலாக புலிச்சாயத்தை பூசி வந்தவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள். அமைச்சரவை அங்கீகாரம் ஆயுதமுனையில் பெறப்பட்டதாக தெரிவிக்கும் அவர்களுடைய கருத்து தொடர்பில் இதுவரை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக நீதியானதும் நியாயமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அமைச்சரவை தீர்மானங்களில் அப்போதைய காலகட்டங்களில் இருந்த தமிழ் ஆயுத குழுக்களின் பிரசன்னம் இருந்ததா என்பதை அக்கருத்துக்களை தெரிவிக்கின்ற அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை விசாரணை செய்வதன் மூலம் தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.

கல்முனையை பொறுத்தவரையில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்து அதனை உண்மைப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.ஹரிஷ். உண்மையில் ஆயுதப் போராட்ட காலத்தில் தமிழர்கள் இழந்தவை அதிகம். அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களை கிராமம் கிராமமாக முஸ்லிம்களிடம் இழந்த வரலாறுகள் மூடி மறைக்க முடியாதவை. இது கல்முனைக்கும் பொருத்தமாகும். சாய்ந்தமருதின் மையம் வரை பரந்து வாழ்ந்த கல்முனையின் பாரம்பரியக் குடிகளான தமிழர்கள் இன்று கல்முனையில் இருந்தும் முஸ்லிம்களால் துரத்தி அடிக்கப்படுவது துரதிஷ்டவசமானது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் தலையீடுகளை மேற்கொள்வதும் அதன் மூலம் கல்முனை பிரதேச செயலாளரினால் தமிழர் பிரதேசங்களில் உள்ள காணிகள் அடாத்தான முறையில் நீதிக்கு புறம்பாகவும் முஸ்லிம்களுக்கு தாரைவாக்கப்பட்டு வருவதும் தொடர்கின்றது. இவற்றால் உருவாக்கப்பட்ட முஸ்லிம்களின் குடியேற்றம் தமிழர் பிரதேசங்களில் ஏராளம். இன்னும் தமிழர்களின் பூர்வீக காணிகளை கபளீகரம் செய்வதற்காகவே கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் இழுத்தடிப்பு செய்யப்பட்ட வருகின்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் வருகின்ற காணிகள் தொடர்பான ஆவணங்களை கையளிக்குமாறு மாகாண காணியாணையாளர் 2006 ம் ஆண்டு கல்முனை பிரதேச செயலாளரை அறிவுறுத்தியிருந்த போதிலும் இன்றுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாறு உயரதிகாரிகளின் அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்கின்ற அளவு முஸ்லிம் அதிகாரிகள் செயல்படுவது நாட்டின் சீரான நிர்வாகத் தன்மையை கேள்விக்குறியாக்கும் செயலாகும்.
பல்லில சமூகம் வாழ்கின்ற இலங்கையில் நீதி, சட்டம், நிர்வாகம் என்பவை சமூக ரீதியாக வேறுபடுகின்றதா என்பது தொடர்பாக ஆராயப்பட வேண்டியதும் மிக முக்கியமானதாக இருக்கின்றது. இதேவேளை கடந்த 35 ஆண்டுகளில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அரச காணி வழங்கல்கள் தொடர்பில் நியாயமான விசாரணைக்கு இலஞ்சை ஊழல் ஆணைக் குழுவை கோருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கல்முனை வடக்கு பிரதேச செயலக சிவில் அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்திருக்கின்றது.

கடந்த 35 வருடங்களாக இந்த வடக்கு பிரதேச செயலக விவகாரம் ஒரு அரசியல் தாயமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்களால் தொடங்கப்படுகின்ற போராட்டங்கள் அரசியல் பிரச்சாரமாக மாற்றப்பட்டு நீர்த்துக் போகச் செய்கின்ற நாடகம் அரங்கேற்றப்படுவது வழமையானது. உறுதிமொழி, உத்தரவாதம், பேச்சுவார்த்தை, எல்லை நிர்ணயம், குழுக்கள் என பல்வேறுபட்ட வடிவங்களில் தீர்வு பொதிகளாக தூதுவர்கள் மூலம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான மக்கள் போராட்டங்கள் மழுங்கடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. அதற்கான முயற்சிகள் இப்பொழுது வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

தமிழர் தரப்பில் வடக்கு பிரதேச செயலக விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பட்ட தரப்புகள் ஜனாதிபதி உள்ளிட்ட பலருடன் உயர் மட்ட சந்திப்புகளை நடாத்தி வருகின்ற அதேவேளை முஸ்லிம் தரப்புகளும் அதை நடைமுறைப்படுத்துவதை தடுப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் அரசியல் தலைமைகளால் மேற்கொள்ளப்படுகின்ற விடயங்கள் அவர்களது தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக பகிரங்கப்படுத்தப்படுகின்ற அதேவேளை முஸ்லிம்களது நகர்வுகள் மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வெற்றியும் காண்கின்றனர்.

ஆனால் உண்மையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான போராட்டத்தை நடத்தி வருகின்ற சிவில் அமைப்புகளும் பொதுமக்களும் தமது போராட்டம் அரசியல் தேவைகளுக்கு அப்பால் நியாயமான, நீதியான நிர்வாக நடைமுறையை அமுல்படுத்துகின்ற ஒரு விடயம் என்பதை தெளிவாக தெரிவித்து இருக்கின்றார்கள். எமது பிரதேச செயலகத்தின் மீது கட்டவிழ்க்கப்பட்ட எதெச்சதிகாராமான செயற்பாடுகளை பொறுக்க முடியாமல் வீதியில் இறங்கி இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றார்கள். இன்று ஆட்சியில் உள்ள அனைவராலும் இது தொடர்பான உத்தரவாதங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு ஒன்றுமில்லாமல் போன வரலாறுகள் ஒன்று இரண்டல்ல என கடந்த காலத்தையும் நினைவு கூருமவர்கள் தங்களுடைய போராட்டம் நியாயமான சட்ட வலுவுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஓயப் போவதில்லை என தெரிவித்து இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

-/ கட்டப்பன்

You missed