இன நல்லிணக்கத்திற்கான நடைப்பயணம்; 52 நாட்களில் 3000 கிலோ மீட்டர்களை கடக்க செல்ரன் பெரேரா திட்டம்!
( அரவி வேதநாயகம்)

இன நல்லிணக்கத்திற்கானதும் இலங்கை சாதனை ஒன்றை இலக்காகக் கொண்டும் இன்று (22) மத்திய முகாம் பகுதியிலிருந்து
நடைபயணம் ஒன்று ஆரம்பமானது.

மத்திய முகாம் விகாரைக்கு முன்பிருந்து செல்ரன் பெரேரா
இன்று காலை இந்த பயணத்தை ஆரம்பித்தார்.

செல்ரன் பெரேராவின் இந்த நடை பயணத்தினை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி.எஸ். ராகுலனாயகி சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

மத்திய முகாம் விகாராதிபதியிடம் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு நடைப்பயணத்தை ஆரம்பித்த செல்ரன் பெரேரா மத்திய முகாமில் இருந்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்தை வந்தடைந்து அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களால் பூமாலை அணிவித்து வரவேற்கப்பட்டார்.

அதன் பின்னர் அங்கிருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை வந்தடைந்து பிரதேச செயலாளர் தி.ஜே .அதிசயராஜ் அவர்களை சந்தித்து உரையாடியதுடன்
தற்பொழுது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்பாக இடம் பெற்று வருகின்ற சுழற்சி முறையிலான போராட்டத்தின் 29 ம் நாள் போராட்ட களத்தில் உள்ள மக்களுடன் செல்ரன் பெரேரா கலந்துரையாடினார். தொடர்ந்தும் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியின் ஊடாக மட்டக்களப்பு நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார்.

இன்றைய அவரது பயணம் காத்தான்குடி வரை இடம்பெற்று நிறைவடையும் என அவர் தெரிவித்திருந்துடன்
மொத்தமாக 52 நாட்கள் பயணத்தை மேற்கொள்ள உள்ள செல்டன் பெரேரா இலங்கை பூராகவும் 3000 கிலோ மீட்டர்களை கடந்து இறுதியாக பொத்துவில் ஊடாக அக்கரைப்பற்று, கல்முனையை வந்தடைந்து மத்திய முகாமை சென்றடைய உள்ளார்.

இலங்கை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜரான
செல்ரன் பெரேரா இலங்கையில் இனங்கள் சமயங்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்கின்ற அடிப்படையிலும் இலங்கைக்குள் ஒரு சாதனையை நிகழ்த்த வேண்டும் எனவும் இந்நடை பயணத்தை ஆரம்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You missed