தெற்கில் ஒரு சட்டம் வடக்கு கிழக்கில் ஒரு சட்டத்தை அமுல்படுத்தினால்  வட கிழக்கை பிரித்து தனிநாடு தரவேண்டும்– நா. உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் காட்டம்–

(கனகராசா சரவணன்)

சட்டம் இல்லாத நாட்டிலே ஒரு சட்டத்துக்கான அமைச்சர் தேவையில்லை தெற்கிலே ஒரு சட்டம் வடக்கு கிழக்கில் ஒரு சட்டத்தை அமுல்படுத்துவீர்களாக இருந்தால் வடக்கு கிழக்கை பிரித்து தனிநாடாக  தரவேண்டும்  அதேவேளை தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக உயிரிழந்த அனைத்து தமிழ் மக்களுக்காகவும் எத்தனை அச்சுறுத்தல் எத்தனை பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தாலும் தொடர்ச்சியாக நினைவேந்தல்களை செய்வோம்  என நா. ம உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் காட்டமாக தெரிவித்தார்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு தூபியில் 2022 நினைவேந்தலில் ஈடுபட்ட நா.உ. கோ. கருணாகரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ்க்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவை மீறி நினைவேந்தல் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிசார் வழக்கு தொடர்ந்தனர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.முகமட்ஹம்சா தலைமையில் நேற்று புதன்கிழமை 31ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது நீதிமன்றில் கோ. கருணாகரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ்; ஆஜராகிய நிலையில் வழக்கு விசாரணையின் பின்னர் வழக்கு  எதிர்வரும் மே 5ம் திகதிக்கு ஒத்திவைத்தார் இதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்; இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 1987 ம் 1991 ம் ஆண்டு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்ட 152 பேர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் ஜனவரி 28ம் திகதி வருடா வருடம் நினைவு கூர்ந்துவருவது வழமை இந்த நிலையில் கடந்த 2022 ஜனவரி 28 வழமைபோல நானும் எனது கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் சென்று நினைவேந்தலுக்கு விளக்கேற்றினோம். எந்தவிதமான தடை உத்தரவும் கிடைத்திருக்கவில்லை

அதன் பின்னர் எனக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்க்கும் பொலிசார் நீதிமன்ற தடை உத்தரவு வழங்கினர். 2021, 2022, 2023, 2024 விளக்கு ஏற்றினோம் எந்த விதமான பிரச்சனையும் இல்லை ஆனால் 2022  கோட்பாய ராஜபக்ஷ ஆட்சில் இருந்த காலம் அவரின் உத்தரவின் பெயரில் தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு இந்த நாட்டிலே ஒரு சட்டம் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகின்றது இந்த நாட்டை ஆளவருகின்ற ஆட்சியாளர்கள் அரச அதிபர்கள் தாங்கள் நினைத்ததையே சட்டமாக கொண்டு நடாத்துவது தான் ஒரு முறையாக இருக்கின்றது

இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா? அல்லது ஒரே நாடு என்ற சட்ட முறை     இருக்கின்றதா?  என்பதை நாட்டுமக்கள் உணரவேண்டும்  வடக்கு கிழக்கிலே இறந்தவர்களுக்கு நாங்கள் நினைவு கூர்வது விளக்கேற்ற முடியாது என கூறினால் தெற்கிலே இந்த நாட்டிலே பெரும் கிளர்சி ஏற்படுத்திய ஜே.வி.பி தங்களது தலைவர்கள் மற்றும் மரணித்தவர்களுக்கு பல்கலைகழகங்களில் சிலைவைத்து நினைவு கூரலாம் என்றால் ஏன் வடகிழக்கில் இப்படியான தடைகள் இருக்கின்றது இந்த தடைகளை மாறிமாறி ஆட்சிக்கு வருபவர்கள் தான் விரும்பியபடி செய்பவர்களாக இருந்தால் இந்த நாட்டில் ஜனநாயகம் சட்டமும் இல்லை.

ஒரே நாட்டில் ஒரே சட்டத்தை பேணி பாதுகாக்க முடியாவிட்டால் ஒரே நாடு தேவையில்லை அந்த நிலமைக்கு நீங்கள் எங்களை தள்ளிவிடுகின்றீர்கள் தெற்கிலே நடை பெறுவது வடகிழக்கில் நடைபெறவேண்டும் ஒரே நாடு ஒரே சட்டமாக இருந்தால் இப்படியான தொந்தரவுகளை கொடுக்ககூடாது

தமிழ் தேசியத்துடன் இணைந்திருக்கும் தமிழ் தேசிய தலைவர்களை எங்கள் இறந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்த கூடாது என அச்சுறுத்துவதன் மூலம் நாங்கள் இதை நிறுத்த போவதில்லை எங்களுக்காக உயிர் நீத்தவர்களை தொடர்ச்சியாக நினைவு கூர்ந்து கொண்டிருப்போம்.

அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகனை பெறுவதற்காக மரணித்தவர்கள் அதில் பொதுமக்களும் சிக்குண்டு மரணித்துள்ளனர் எனவே எத்தனை அச்சுறுத்தல்கள் எத்தனை பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தாலும் தொடர்சியாக நினைவேந்தல்களை செய்து கொண்டுவருவோம் அதனை செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது என்றார்.