காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின்
சங்கத்தின் தலைவிக்கு விளக்கமறியல்

வவுனியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை, போராட்டத்தை வீடியோ எடுத்த பெண்ணை வவுனியா நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுத்துள்ளது.

வவுனியாவுக்கு நேற்று காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநகர சபை கலாசார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

ஜனாதிபதியின் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்துக்குச் செல்லும் பாதையில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு நேற்று போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு வவுனியா நீதிவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

நன்றி -முரசு