அதாஉல்லாவின் கட்சி பதவிகளை விட்டு விலகினார் மகன் ஸஹி : தேசிய காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்?

நூருல் ஹுதா உமர்

தேசிய காங்கிரஸின் உதவி  செயலாளர் நாயகமும், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் முதல்வருமான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் சிரேஷ்ட புதல்வர் அதாஉல்லா அஹமட் சகி தனது தந்தையின் கட்சியின் சகல பொறுப்புகளிலிருந்தும் நேற்று முதல் ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமாவை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள அறிக்கையில் எத்தருணத்திலும் மாறிவிடாத எனது அன்பிலும், மரியாதையிலும் பங்கு கொண்டிருக்கும் தேசிய காங்கிரஸின் பேராளர்களே! நண்பர்களே!உடன்பிறப்புகளே பதவிகள், பட்டங்கள், உயர்வுகள் யாவும் இறைவனின் ஆசியுடன் மனிதர்களுக்கு வழங்கப்படும் அமானிதங்கள் என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டவன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது அறிக்கையில், இரண்டு தடவைகள் அக்கரைப்பற்று மாநகர முதல்வராக எனக்கு வழங்கப்பட்ட அமானிதத்தை இயலுமானவரை பாதுகாத்திருக்கிறேன். மாநகரத்தின் வளர்ச்சிக்காகவும், திறன்பட அச்சபையினை வழி நடாத்துவதிலும் எனது முழுமையான பங்களிப்பினை செலுத்தி அதில் வெற்றியும் கண்டிருக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ். எனது காலத்தில் மாநகர சபை பல விருதுகளை வென்றுள்ளது. மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அர்ப்பணிப்புடனான இப்பணிக்கு என்னுடன் மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், உடன்பிறப்புக்களாகிய நீங்களும் செய்த உதவிகள் எத்தருணத்திலும் மறக்க முடியாதவை. அதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுதல் மாத்திரம் தகாது. வல்ல நாயகன் அல்லாஹ் நம் பணிகளை ஏற்றுக் கொள்வான் என்பதிலும், இதற்கான கூலியினை தந்தருள்வான் என்பதிலும் நான் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளேன்.

தேசிய காங்கிரஸினை பிரதிநிதித்துவப்படுத்தியும், அதன் தலைவரின் வழிகாட்டலிலும் கட்சியின் உதவி செயலாளர் நாயகம் பதவியில் எனது பயணம் மிக நீண்டது. தேசிய காங்கிரஸ் இலங்கையில் வாழ்கின்ற சகல மக்களுக்குமான நிம்மதியான வாழ்வினை பிரதிநிதித்துவப்படுத்தி செயல் களத்தில் பல்வேறு சாதனைகளையும், அபிவிருத்திகளையும் மேற்கொண்ட தார்மீகத்தின் வழியாக செயற்பட்ட அரசியல் தளமாகும்.

எமது உடன்பிறப்புக்கள் இக்கட்சியின் மீதும், அதன் தலைமையின் கொண்ட நம்பிக்கையும், பற்றும் என்னை எப்பொழுதும் பிரமிக்க வைத்திருக்கிறது. தேசிய காங்கிரஸின் உதவி செயலாளர் நாயகமாக பதவி வகித்த காலங்களில் கட்சிக்காக எனது உழைப்பென்பது திறந்த மனதுடனும், எண்ணமே வாழ்வெனும் அடிப்படையில் மிக நேர்த்தியாக கையாள முடிந்ததில் தன்னிறைவு அடைகிறேன். காலங்களும், சந்தர்ப்பங்களும் எமக்கு ஏராளமான பாடங்களை கற்றுத்தருகிறது. அனுபவமே நல்ல ஆசான் எனும் வாக்கிற்கு ஏற்ப என் வாழ்நாட்களில் இப்பயணத்தின் வழியே நிறையவற்றை கற்றிருக்கிறேன்.

இன்றிலிருந்து; தேசிய காங்கிரஸின் உதவி செயலாளர் நாயகம் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிக் கொள்ளவதற்கான கடிதத்தினை தேசிய காங்கிரஸின் தலைமையிடம் ஒப்படைத்து விட்டேன். இதுவும் ஒரு வகை அனுபவம்தான். ஆனாலும் தேசிய காங்கிரஸ் எமக்கான கட்சி என்பதால் அதன் அடிமட்ட தொண்டனாக இருந்து எனது பணியினை செய்து கொண்டேயிருப்பேன். கட்சிப் பணிகளில் எனது உழைப்பு எப்பொழுதும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். தலைமையின் வழிகாட்டலில் கட்சி உறுப்பினர்கள் அனைவருடனும் சேர்ந்து மிக உற்சாகமாக பயணிப்பேன். பதவிகள் மாத்திரம் ஓர் கட்சிக்கான விசுவாசத்தினை தீர்மானிப்பதில்லை என்பதினை இனிவரும் காலங்களில் செயற்படுத்த நினைக்கிறேன்.

இதுவரை காலமும் என்னுடன் கைகோர்த்து இக்கட்சி பணியில் களம் கண்ட உடன்பிறப்புக்களை மறவாது நெஞ்சில் இருத்திக் கொள்கிறேன் என்றும்  தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் கட்சியை விட்டு பலரும் விலக செல்ல காரணம் இவருக்கு இவரது தந்தை வழங்கிய முன்னுரிமையும், தொடர்ந்தேர்ச்சியான அதிகார வழங்களுமே என்று பகிரங்க குற்றசாட்டு பொதுவெளியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.