மட்டு வவுணதீவில் பயங்கரவாத தடை சட்டத்தில்  கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணி அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேருக்கும் 13 வரை விளக்க மறியல்-

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றி நினைவேந்தலில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் அவரது மகன் மற்றும் மாவீரர் நினை வேந்தலுக்காக வாகனத்தில் கொடிகளை ஏற்றிச் சென்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரையும்  எதிர்வரும் 13 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று புதன்கிழமை (29) உத்தரவிட்டாh.;  

கடந்த 27ம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர்  தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தினை அலங்கரிக்க மட்டக்களப்பு நகரில் இருந்து பட்டா ரக வாகனத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகள் மற்றும் கம்பிகள் உட்பட்ட பொருட்களை எடுத்துச் சென்ற நிலையில் வாகனத்தை மறித்து சாரதியை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சாரதியை பார்பதற்காக பொலிஸ் நிலையம் சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் குககுலராஜா (குகன்) அவரது மகன் ஆகியேர் அங்கு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வீதியில் மாவீரர்களுக்கா விளக்கேற்றி நினைவேந்தலில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 3 பேரையயும் 72 மணித்தியாலயம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதியை பெற்று தடுத்துவைத்தனர்.

இந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 பேரையும்  நேற்று புதன்கிழமை (29); மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்டபோது அவர்களை எதிர்வரும் 13 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.