பாராளுமன்றத் தேர்தலொன்றுக்கு விரைவில் செல்வது தொடர்பில் உயர்மட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் 2024 டிசம்பர் மாதத்துக்கு முன்னரும், பொதுத் தேர்தல் 2025 ஓகஸ்ட் மாதத்துக்கு முன்னரும் நடத்தப்பட வேண்டும் . எனினும் முதலில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வருடம் முதல் ஆறு மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அரசியல் களத்தின்படி எந்தவொரு கட்சியும் 113 எம்.பி.க்களைக் கொண்ட பெரும்பான்மையைப் பெற முடியாத நிலைமை இருக்கும் காரணத்தினால் பலவீனமான கூட்டணி அரசாங்கம் உருவாகும் என்பதால் அதன் பின்னர் பல கட்சிகள் கொண்ட கூட்டணியை உருவாக்கி ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க ஜனாதிபதி உத்தேசம் செய்துள்ளதாகவும் அந்தப் பத்திரிகை மேலும் கூறுகிறது.