அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் வாகரை மகா வித்தியாலயம் முதலாமிடம்.

கலைஞர்.ஏஓ.அனல்

அகில இலங்கைத் தமிழ்த் தினப் போட்டிகளில் மாவட்ட மட்டப் போட்டிகள் மட்டக்களப்பு வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தில் கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்வி அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் 16.09.2023 ஆம் திகதி சனிக்கிழமை நல்லையா மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பட்டிருப்பு, மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயத்தைச் சேர்ந்த கல்வி அதிகாரிகள் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்த இந்த நிகழ்வில் பல நிகழ்ச்சிகள் இடம்பித்திருந்தன.

அதிலும் குறிப்பாக சிந்துநடைக் கூத்து போட்டியில் முதல் முறையாக வாகரை மகா வித்தியாலயம் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தில் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளமை பாடசாலை சமூகத்துக்கு மாத்திரமன்றி அந்த வலயத்துக்கும் பெரும் கீர்த்தியைப் பெற்றுத் தந்திருக்கிறது.

இந்தப் போட்டிக்கான சிறந்த நெறிப்படுத்தலை திரு. வி. கோகுலன் ஆசிரியர் அவர்களும், ஆலோசனை வழிகாட்டல்களை பாடசாலை முதல்வர் திரு. சி. ரமேஸ்கலைச்செல்வன் அவர்களும், போக்குவரத்து உதவிகளை பழைய மாணவர் சங்கத்தினரும் வழங்கியிருந்ததோடு, பாடசாலை ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் ஏனைய நலன் விரும்பிகள் எனப் பலரும் இப்போட்டிக்கான ஆக்கப்பூர்வமாக ஊக்கங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.