தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்களை கொடுத்த 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரம் நடந்தேறி 40 வருடங்கள் உறுண்டோடிவிட்டன.

இது போன்ற ஒருநாளில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தலைநகரில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் பல சூறையாடப்பட்டு, கொழும்பில் அனைத்து தெருக்களிலும் இயங்கிய தமிழ் வர்த்தகர்களின் வியாபார நிலையங்கள், தமிழர்களின் வீடுகள் மற்றும் வாழ்விடங்கள், வாகனங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.

வீதியில் சென்றோர், வீடுகளில் இருந்தோர், வயோதிபர், பெண்கள், சிறுவர்கள், நடுத்தர வயதினர் என பாகுபாடின்றி அனைவரும் கொடூரமாக தாக்கப்பட்டனர்.

23 ஆம் திகதி ஆரம்பித்த இனக்கலவரம் மாதத்தின் இறுதி வரை நீண்டு சென்ற இந்த கலவரத்தில் 400 முதல் 3,000 வரையானோர் உயிரிழந்திருக்கக் கூடும் என கூறப்படுகின்றது.

10 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழரின் வாழ்விடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன என்றும் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டதாகவும் ஜூலைக் கலவரம் சம்மந்தமான தரவுகள் குறிப்பிடுகின்றன.

இதே காலப்பகுதியில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலில் தமிழ் அரசியல் கைதிகள் 53 பேர் வரை கொல்லப்பட்டார்கள்.

இனக்கலவரத்தில் தமிழர்களை அழிக்க வெறியோடு ஒரு கூட்டம் விரட்டினாலும், மனிதாபிமானமுள்ள சில சிங்கள மக்களால் பல தமிழர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி -உதயம்