அம்பாறை மாவட்ட முன்னாள் பா.உ, தோமஷ் மறைவு பேரிழப்பாகும்!

பா.அரியநேத்திரன் மு.பா.உ.

பாண்டிருப்பை சேர்ந்த அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுகட்சி ஆயுள்கால உறுப்பினரும், முன்னாள் கல்முனை தொகுதி தலைவருமான வைத்தியர் அமரர் தோமஷ் தங்கத்துரை வில்லியம் அவர்களுன் இறப்பு எமக்கு பாரிய பேரிழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அவரின் மறைவு தொடர்பாக மேலும் கூறுகையில் இலங்கை தமிழரசுகட்சி பற்றாளராக இருந்த தோமஷ் அவர்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக கடந்த 2004, ல் நிறுத்தப்பட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் 2004,ல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மூலமாக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு விருப்பு வாக்கு அடிப்படையில் வெற்றி பெற்றவர் காரைதீவை சேர்ந்த பத்மநாதன், விருப்பு வாக்கு அடிப்படையில் இரண்டாவது நிலையில் இருந்தவர் திருக்கோயிலை சேர்ந்த சந்திரநேரு அவர்கள்,
விருப்பு வாக்கு அடிப்படையில் மூன்றாவது இடத்தில் இருந்தவர் பாண்டிருப்பை சேர்ந்த வைத்தியர் தோமஷ் தங்கத்துரை வில்லியம் அவர்கள்.

இதில் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்கள் 2004, பெப்ரவரி,08, ம் திகதி அப்போது விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பொறுப்பாளராக செயல்பட்ட கௌசல்யன் உட்பட ஏழு பேருடன் அவரின் வாகனத்தில் வன்னியில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவரும்போது வெலிகந்த வீதியில் இடைமறித்த தமிழ் ஆயுத குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக எம்முடன் செயல்பட்ட வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட பணிப்பாளராக இருந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான காரைதீவு க. பத்மநாதன் அவர்கள் 2009, மே, 19,ல் இந்தியாவில் தமது சொந்த விடயமாக சென்றிருந்த நிலையில் இயற்கை மரணமானார்.

இவரின் வெற்றிடத்திற்கு அம்பாறை மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு விருப்பு வாக்கு அடிப்படையில் மூன்றாவது இடத்தில் இருந்த பாண்டிருப்பை சேர்ந்த அமரர் தோமஷ் தங்கத்துரை வில்லியம் அவர்கள் 2009, மே, 25,ல் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்று எம்முடன் இணைந்து பணியாற்றினார்.

இவரை அம்பாறை மாவட்ட இலங்கை தமிழ் அரசுக்கட்சி தலைவராக அம்பாறை மாவட்ட தமிழரசுகட்சி உறுப்பினர்கள் தேர்த்தெடுத்தனர்.2015, ம் ஆண்டு வரை அம்பாறை மாவட்ட தலைவராக பணிபுரிந்தார்.

துணிச்சலும் நேர்மையும் தமிழ்தேசிய பற்றும் கொண்ட இவர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல நில அபகரிப்புகள், திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பாகவும் அபிவிருத்திகள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் உரையாற்றி உள்ளார்.

சிறந்த கைராசி வைத்தியராக பாண்டிருப்பில் அவருடை வீட்டில் மக்களுக்கான வைத்திய சேவைகளை செய்து பின்தங்கிய கிராம மக்களின் நன்மதிப்பை பெற்றவராக திகழ்ந்தார்.

அரசியல், சமூக, வைத்திய துறைகளில் தன்னை அற்பணித்து பல பணிகளை ஆற்றிய தோமஷ் தங்கத்துரை வில்லியம் அவர்களின் இழப்பு எமது தமிழ்தேசிய அரசியலில் பேரிழப்பாகும் என மேலும் கூறினார்.