அரசாங்கத்தின் வரி கொள்கையால் தொழிற்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அரசாங்கத்தை வீழ்த்தும் வகையிலான போராட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து முன்னெடுப்போம் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், தொழிலாளர் உரிமைகளை முடக்கும் வகையில் சட்டங்களை இயற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிரான ஏற்பாடுகளை கொண்டுள்ளது.

மே 1 முதல் போராட்டம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் தொழிலாளர்கள் தங்களின் தொழில் உரிமைக்காக போராட முடியாது. தொழில் உரிமைகளை அரசாங்கம் இரத்து செய்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவும் முடியாது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாட்டு மக்களை ஒன்றுத்திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஜனநாயக போராட்டம் கூட பயங்கரவாதமாக அடையாளப்படுத்தப்படும்.

அரசாங்கத்தின் வரி கொள்கையால் தொழிற்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தை வீழ்த்தும் வகையிலான போராட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து முன்னெடுப்போம்.

தொழில் உரிமைக்கான போராட்டம் அரசியல் கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.