உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்ந்தும் நெருக்கடியாகவே காணப்படுகின்ற நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் திங்கட்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்திக்கவுள்ளனர்.
தவிர்க்க முடியாத காரணிகளால் கடந்த வாரம் பிரதமருடனான சந்திப்பு இடம்பெறவில்லை என்பதால், இவ்வாரம் நிச்சயம் குறித்த சந்திப்பு இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாளை மறுதினம் பிரதமருடன் நிச்சயம் சந்திப்பு இடம்பெறும். கடந்த வாரம் தவிர்க்க முடியாத காரணிகளால் சந்திப்பு இடம்பெறவில்லை.
இந்த சந்திப்பின்போது நிதி நெருக்கடியின் காரணமாக எம்மால் அடுத்த கட்டமாக எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றமை தொடர்பில் பிரதமருக்கு தெளிவுபடுத்தப்படும்.அதற்கமைய எடுக்கப்படும் முடிவுகளுக்கமையவே வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள், தபால் மூல வாக்கெடுப்பு உள்ளிட்டவை தொடர்பில் தீர்மானிக்க முடியும்.
இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் வருகிற செவ்வாய்க்கிழமை இடம்பெறும். இதன்போது தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.