அபு அலா

சமூக சேவையாளர் சரவணமுத்து யோகநாயகத்தின் 4வது ஆண்டு ஞாபகார்த்த நினைவையொட்டி திருகோணமலை இலுப்பைக்குள பிரதேச சமுர்த்தி பயனாளிகளின் நலன்கருதி 4 இலட்சம் ரூபாய் நிதியில் நீர்மானிக்கப்பட்ட இளைப்பாறும் கட்டடம் திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (28) இடம்பெற்றது.

காப்போம் அமைப்பின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவுக்கு கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இளைப்பாறும் கட்டடத்தை திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கும் கையளித்து வைத்தார்.

இத்திறப்பு விழாவில், இலுப்பைக்குளம் சமுர்த்தி முகாமையாளர், திட்டமிடல் உத்தியோகத்தர், சமுர்த்தி வங்கி அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் காப்போம் அமைப்பின் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட சமுர்த்தி பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுமார் 2000 சமுர்த்தி பயனாளிகளைக் கொண்ட இலுப்பைக்குளம் பிரதேச சமுர்த்தி அலுவலக வளாகத்தில் இந்த இளைப்பாறும் கட்டடம் நிர்மனிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளித்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.