இலங்கைக்கு வழங்கியுள்ள கடன்களை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பு செய்வதற்காக சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி (EXIM) தமக்கு செலுத்தப்பட வேண்டிய கடன் மற்றும் வட்டித் தொகையை இரண்டு வருடங்களுக்கு அறவிடாமல் இருப்பதனூடாக, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ள போதிலும், குறித்த நிதி வசதியை இலங்கைக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு அந்த உத்தரவாதம் போதுமானதாக இல்லை என கலந்துரையாடல்களில் பங்கேற்கும் நபர்களை மேற்கோள்காட்டி ரொய்டர் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

அதுபோன்று சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் ஆதரவை வெளிப்படுத்தப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அவ்வாறான உடன்பாடு பற்றிய எவ்வித அறிவிப்பும் தமக்குக் கிடைக்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாகவும் அச் செய்திச் சேவையின் செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு வரையில் இலங்கைக்கு சீனாவிடமிருந்து 7.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக வழங்கப்பட்டுள்ளதுடன், இதில் 4 பில்லியன் பெறுமதியான தொகை சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியினூடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடன் தொகையை மீளச் செலுத்துவதற்காக எதிர்வரும் இரண்டாண்டு காலப் பகுதிக்கு சலுகைக் காலத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்து நிதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ள போதிலும், அந்தக் கடனை நீக்கிக் கொள்வது பற்றி எதனையும் குறிப்பிடவில்லை.

You missed