நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை 2023 ஆம் ஆண்டை தரத்தை நோக்கிய வீறுநடை என்ற தொனிப் பொருளின் கீழ் சகல விதமான செயற்றிட்டங்களையும் கருத்திட்டங்களையும் முன்னோக்கி கொண்டு செல்வது என தீர்மானம் மேற்கொண்டதற்கு அமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையின் கீழ் இன்று ஆரம்ப பராமரிப்பு சுகாதார பிரிவுகளுடனான கலந்துரையாடலை ஏற்பாடு செய்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக பொருளாதார நெருக்கடிமிக்க இக்காலகட்டத்தில் நோயாளிகளுக்கு தரமான சேவைகளை வழங்குவதையும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றி சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகளை திருப்தியுடன் அனுப்பி வைப்பது தொடர்பிலும் கரிசனை செலுத்துமாறு பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் இக்கூட்டத்தின் போது வலியுறுத்தியதுடன் இதற்காக அனைத்து வைத்தியசாலைகளிலும் பொதுமக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தர்கள் மற்றும் உதவியாளர்களை நியமித்து அவர்கள் ஊடாக மக்களுக்கு வலிந்துததும் செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் திருப்தியான சேவைகளை வழங்குவதில் உள்ள சவால்கள் தடைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பு வைத்திய அதிகாரிகளிடம் தத்தமது சேவை நிலையங்களில் காணப்படுகின்ற பிரச்சனைகள் சவால்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கடந்த காலங்களில் வைத்திய சாலைகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்களும் பணிப்பாளரினால் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பிரதி பணிப்பாளர் எம் பி ஏ வாஜித், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம் சீ எம் மாஹிர், தர முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி பிஜீபி டானியல், சுற்றுச்சூழல் மற்றும் தொழில் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம் பௌஷாத், பணிமனையின் கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கல்முனை சுகாதார பிராந்தியத்திற்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You missed