இன்று கானகப் பாதை மூடப்படும்!கானகப்பாதையில் பைலா கும்மாளம் தேவையா?
பாதயாத்திரீகர் திருச்செல்வத்தின் கேள்வி
( வி.ரி. சகாதேவராஜா)
கதிர்காம பாதயாத்திரையில் பல முருக பக்தர்களுக்கு மன உளைச்சலையும் விரக்தியையும் ஏற்படுத்திய அருவருக்க தக்க செயல்கள் இம்முறை நடைபெற்றுள்ளது. எதிர்காலத்தில் இவை களையப்பட வேண்டும்.
இவ்வாறு வரலாற்று ஆய்வாளர் கலாநிதி என் கேஎஸ்.திருச்செல்வம் கதிர்காம பாதயாத்திரை அனுபவத்தை விவரிக்கிறார்.
இன்று(4) வெள்ளிக்கிழமை கதிர்காமத்திற்கான கானகப் பாதை மூடப்படும். கடந்த 15 நாட்களாக இப் பாதை திறந்திருந்தது.சுமார் 40 ஆயிரம் அடியார்கள் கானகப்பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள்.
அவர் அதுபற்றி மேலும் தெரிவிக்கையில்…
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சிறப்பு மிக்க பக்தி பூர்வமான பாதயாத்திரையில் உலகின் பல பாகங்களிலும் இருந்து பல முருக பக்தர்கள் விரதமாகவும் இறை நாமங்களை உச்சரித்தும் பக்தி சிரத்தையோடு யாத்திரை மேற்கொள்கிறார்கள்.
கானகத்தில் கந்தனை காண பல காலம் காத்திருந்து பய பக்தியுடன் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கிறார்கள். ஆனால் எங்களுடைய சமயத்தில் மாத்திரம் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாத காரணத்தினால் கானகத்தில் ஊடுருவும் சில நபர்களாலும் சிறு குழுக்களாலும் பல பக்தர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வண்ணம் இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகளும் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றது.
மாற்று இனத்தவர்கள், சிங்களவர்கள்/ பௌத்தர்கள், வெளி நாட்டவர்கள் கூட பக்தியுடன் பாதயாத்திரையை மதித்து தலை வணங்கி அரோகரா என்று யாத்திரை மேற்கொள்கின்றனர்.. ஆனால் எங்களுடைய சிலர் கோமாளித் தனமாக பைலா பாடல்கள் சினிமா பாடல்கள், கும்மாளம், இசை கச்சேரி என பக்தர்களை தொந்தரவு செய்யும் வகையில் இரவு பகல் பாராமல் அடியார்களின் பக்திக்குரிய யாத்திரைக்கு தொடர்ச்சியாக இடையூறு ஏற்படுத்தப் படுகின்றது. இதனால் பல அடியார்கள் வெளியில் சொல்லவும் முடியாமல் தட்டி கேட்கவும் முடியாமல் பல மன அவதிக்கு உள்ளாகிறார்கள்.
பக்தி பாடல்களும் கூட்டு பிரார்த்தனைகளும் சிறிய பஜனைகளும் இடம் பெற வேண்டிய இந்த காட்டு வழி பாதையில் இது போன்று இடம்பெறும் எல்லை மீறிய பைலா இசை குதூகலங்கள் நிச்சயமாக நிறுத்தப்படல் வேண்டும் என பக்தர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இது தொடர்பில் எதிர் வரும் காலங்களில் உரிய நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொண்டு இது போன்ற சமய விழுமிய கலாசார சீர்கேடுகளை விளைவிக்கும் நபர்களுக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கபட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்கள்..
அனுபவப் பகிர்வு!
இந்த முறை பாத யாத்திரையின் போது பல சவால்களுக்கு முகம் கொடுத்து புதிய அனுபவங்கள் பலவற்றைப் பெற்றோம்.
முதல் நாளன்றே சுமார் 12,000 பாத யாத்திரீகர்கள் காட்டுக்குள் இறங்கினர்.
இதனால் தங்கும் இடங்களில் இட நெருக்கடி ஏற்பட்டது.
வாகூர வெட்டையில் இருந்து கூமுனை வரையில் சுமார்
10 கி. மீ தூரத்திற்கு குடிநீர் கிடைக்கவில்லை. 4 மணி நேரம் தாகத்துடன் பயணம் செய்தோம்.
குடிநீர் இல்லாமல் பறவைக் குளத்து நீரைக் குடித்தோம். நல்ல புதிய அனுபவம் தான்.
இது போல நாவலடியில் இருந்து கள்ள வியாளை வரை குடிநீர் கிடைக்கவில்லை.
பல தன்னார்வத் தொண்டு அமைப்புகள் பவுசர் மூலம் குடிநீர் வழங்கின. ஆனால் மேற்குறிப்பிட்ட இடங்களில் அவர்களின் சேவை சரியாக இடம்பெறவில்லை.
தொண்டு அமைப்புகள் காட்டுப் பாதையை பகுதி பகுதியாகப் பிரித்து குடிநீர் வழங்கும் சேவையை செய்து வந்தன. மேற்குறிப்பிட்ட இரண்டு பகுதிகளில் குடிநீர் வழங்க அமர்த்தப்பட்ட அமைப்புக்கள் எதிர் காலத்தில் இந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
முன்பெல்லாம் பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு குடிநீர் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை.
காட்டில் உள்ள ஆறுகள், குளங்கள் ஆகியவற்றில் உள்ள நீரைப் பருகினர். குட்டைகளில் உள்ள நீரை எடுத்து சூட வைத்து, வடிகட்டி, ஆற வைத்து, குடித்து நடந்து வந்தனர்.
ஆனால் 2008 ஆம் ஆண்டின் பின்னரே நீர்த்தாங்கி மற்றும் பவுசர் மூலம் குடிநீர் வழங்க ஆரம்பித்தனர். இவ்வாறு குடிநீர் கிடைப்பதால் பாத யாத்திரீகர்களும் 2008 க்கு முன்பு போல் தமக்குத் தாமே குடிநீரை தயார் செய்து கொள்ளும் வழி முறைகளைக் கை விட்டு விட்டனர்.
அடுத்த சவலாக இருந்தது உப்பாறு.
வழமைக்கு மாறாக மார்பளவுக்கு நீர் இருந்தது. சுமார் 400 மீற்றர் தூரத்திற்கு ஆறு அகலமாய் ஓடியது, சிறுவர்கள், வயோதிபர், உயரம் குறைந்தவர்கள் ஆகியோரையும் அவர்களின் பொதிகளையும் தூக்கிக் கொண்டு சென்று அக்கரையில் சேர்த்தோம். நான் உட்பட பலர் 5, 6 தடவைகள் ஆற்றில் இறங்கிச் சென்று உப்பாற்றைக் கடக்க முடியாதவர்களுக்கு உதவினோம்.
வியாளையில் இரவு உணவு உண்டவர்கள் பலருக்கு உணவு விஷமாகி தொடர் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அவதியுற்றதையும் கண்டோம். இதனால் ஒரு இளைஞர் நோய் வாய்ப்பட்டு மரணத்தின் வாசலுக்கே சென்று மீண்டதை நேரில் கண்டோம்.
இந்தத் தருணத்தில் பாத யாத்திரையாக வந்த டாக்டர் ஒருவர் முதலுதவி செய்து அந்த இளைஞரைக் காப்பாற்றினார்.
அந்த வைத்தியருக்கு கோடி நன்றிகள்.
இத்தனை சவால்களுக்கு மத்தியில் சில தன்னார்வத் தொண்டு அமைப்புகள் குடிநீர், குளிர் பானம், மூலிகைத் தேநீர் ஆகியவற்றை வழங்கி பாத யாத்திரீகர்களின் தாகம் தீர்த்தன. நான்கு இடங்களில் அன்னதானம் வழங்கி யாத்திரீகர்களின் பசியைப் போக்கின. சில இடங்களில் மருத்துவ சேவைகளை வழங்கி நோய் தீர்த்தன.
இவர்கள் அனைவருக்கும் நன்றி.
இவற்றிற்கு மத்தியில் வழமையாக நாம் மேற்கொள்ளும் பணிகளையும் செய்தோம். வாகூர வெட்டை உட்பட சில இடங்களில் விதைகளை நட்டோம். யாத்திரீகர்கள் போட்ட பொலீத்தீன் பைகள், வெற்று பிளாஸ்டிக் பொத்தல்கள் மற்றும் குப்பைகளைப் பொறுக்கி எரித்தோம்.
பாத யாத்திரீகர்கள் காட்டை மாசு படுத்தாமல் அதன் வளத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது பற்றிய அறிவுரைகளை உகந்தை முதல் வியாளை வரை ஒலிபெருக்கி மூலம் வழங்கி வந்தோம். இதனால் இம்முறை காட்டுப் பாதையில் குப்பைகள் அதிகமாகக் காணப்படவில்லை.
எது எப்படி இருந்தாலும் இந்த இன்ப, துன்பங்களை அனுபவித்து 6 நாட்கள் கால் நடையாக வந்து கதிர்காம சந்நிதியில் முருகனைக் காணும் அந்தத் தருணத்தை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.
இதை அனுபவிக்க ஒரு முறையாவது காட்டுப் பாதையில் கதிர்காமத்துக்கு பாதயாத்திரை செல்ல வேண்டும்.
எமது கலாசார பண்பாட்டு விழுமியங்களை கட்டி காக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமை ஆகும் என்றார்.

