“அரசியல் தீர்வுத் திட்டம் சம்பந்தமாக இலங்கை அரசுடன் நடத்தப்படும் பேச்சுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. வழங்கப்படும் உறுதிமொழிகளை ஆட்சியாளர்கள் அமுல்படுத்துவது இல்லை.

எனவே, இனியும் தாமதிக்காது, தீர்வை வென்றெடுக்க இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம்.”- இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், இந்தியாவிடம் இன்று கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் இன்று நடைபெற்றது.

நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை அரை மணிநேரம் நடைபெற்ற இந்தப் பேச்சில், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம், மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வுத் திட்டம் மற்றும் காணி விவகாரம் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது, “தீர்வுத் திட்டம் சம்பந்தமாக இலங்கை அரசுடன் நடத்தப்படும் பேச்சுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில் உத்தரவாதம் வழங்கப்பட்டாலும், அவை நிறைவேற்றப்படுவதில்லை. எனவே, விரைவில் தீர்வை வென்றெடுக்க இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம்” – என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

இதற்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடம் இன்று காலை வலியுறுத்தினேன். கூட்டுச் செய்தியாளர் சந்திப்பிலும் பகிரங்கமாக அறிவித்தேன்.

13 ஐ முழுமையாக அமுலாக்க இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்” என்று குறிப்பிட்டார்.13 ஐ ஏற்றால், ஒற்றையாட்சியை ஏற்றதாகிவிடும் என இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. குறிப்பிட்டார்.

“இருப்பதை அமுல்படுத்தாவிட்டால், அதுவும் இல்லாமல்போகலாம். எனவே, இடைக்காலத் தீர்வாகவேனும் அதை ஏற்க வேண்டும். தீர்வைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது மட்டும் தீர்வு அல்ல” – என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

“தெற்கின் நிலை தற்போது மாறியுள்ளது. அவர்களுடன் நாங்கள் பேசலாம். அவர்களின் மனநிலையையும் நாங்கள் மாற்றலாம்” – என்று கஜேந்திரகுமார் எம்.பி. குறிப்பிட்டார்.

கஜேந்திரகுமார் எம்.பியின் இந்தக் கருத்துக்குச் சுமந்திரன் எம்.பியும் இணங்கினார். எனினும், இருக்கின்ற அதிகாரங்களை நாங்கள் உடனே பெற வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி. வலியுறுத்தினார்.

“இலங்கையின் தெற்கு மக்களுடன் கலந்துரையாடும் பணியை ஒரு நாடு என்ற வகையில் இந்தியாவால் மேற்கொள்ள முடியாது. அதனை நீங்கள்தான் மேற்கொள்ள வேண்டும்” – என்று தமிழ்த் தலைவர்களிடம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எடுத்துரைத்தார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி., தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி. தேர்தல் பணி காரணமாக இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

You missed