தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி வெளியேறுவதாக அறிவித்துள்ளது. தமிழரசு கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானத்துக்கு அமைய, எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிட உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சிகள் இதனை எதிர்த்து வருகின்றன. தமிழ் கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து செயல்படுவதற்கு இந்த பங்காளி கட்சிகள் தீர்மானித்திருக்கின்றன. பங்காளி கட்சிகளின் தீர்மானத்திற்கு உடன்படாத தமிழரசு கட்சி, தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ளதோடு, உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பின்பு, மீண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளோடு இணைவதாக தெரிவித்துள்ளது.

என்றாலும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் இதற்கு உடன்படவில்லையென தெரிய வருகிறது. சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல். எப் கட்சி, சிவி விக்னேஸ்வரன், ஸ்ரீ காந்தா, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றையும் உள்வாங்கி தேர்தல் களத்தில் குதிக்கப் போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய இரண்டு பங்காளி கட்சிகளும் அறிவித்துள்ளன.

இது தொடர்பான கூட்டம் சற்று நேரத்துக்கு முன்னர், கொழும்பில் உள்ள இரா சம்பந்தனின் வீட்டில் நடந்ததாக தெரிய வருகிறது. தற்போது கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.