(கனகராசா சரவணன்)

மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது. அந்த மாற்றத்தை நோக்கியே ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) வடக்கு கிழக்கு மலையகம் போன்ற பிரதேசங்களில் உள்ளுராட்சித் தேர்தலில் தனித்துவமாக களமிறங்கும் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் பிரபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள உல்லாச விடுதி ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பினர் இடம்பெற்ற ஊமக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காலாகாலமமாக எமது தமிழ் மக்கள் நம்பி நம்பி ஏமாற்தவர்களே ஒழிய எதையும் பெற்றுக் கொண்டதோ, சாதித்ததோ சரித்திரம் இல்லை.

தற்போது தேர்தல் என்ற ஒரு மாயை உருவாகியுள்ளது. அதற்குள் அனைவரும் உள்வாங்க வேண்டியது காலத்தில் கட்டாயம். அதனுள் ஈரோஸ் எவ்வாறு பங்களிப்புச் செய்யப் போகின்றது என்பது தொடர்பில் ஆராய்ந்துள்ளோம்.

கடந்த சில வருடங்களாக சில வெளிநாட்டு சக்திகளின் செயற்பாடுகள் காரணமாக எமது ஈழவர் ஜனநாயக முன்;னணி கட்சி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

கடந்த டிசம்பர் 23ம் திகதி நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் மீண்டும் ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகமாக நான் தெரிவு செய்;யப்பட்டு எமது கட்சி தொடர்ந்து செயற்பட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனவே எமது கட்சியினூடாக எமது மக்களுக்கான காத்திரமான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்தத் தேர்தலில் கலந்து கொள்வதா இல்லையா என்ற கலந்துரையாடலை வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனைத்து இடங்களிலும் மேற்கொண்டு வருகின்றோம்.

கணிசமான உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தல்களை எதிர்கொள்வதாகவும், சில பிரதேச சபைகள், நகரசபைகள், மாநகரசபைகளை சில அரசியற் கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதாகவும் எமது கூட்டங்களில் முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றன.

இது ஒரு ஜனநாயக நாடு, நாங்கள் ஒரு ஜனநாயகக் கட்சி என்று சொல்லிக் கொண்டு தனி ஒருவர் கையில் அதிகாரம் இருக்கக் கூடாது என்ற கொள்கையுடையதே ஈரோஸ் கட்சி. அந்த அடிப்படையில் தான் இன்றைய தினம் வடக்கு கிழக்கு மாகணங்களைச் சேர்ந்த தோழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அதிகாரம் பரவலாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது.

அந்த மாற்றத்தை நோக்கியே மக்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த மாற்றத்தைக் கொடுக்க வேண்டிய கடப்பாடு ஈரோசுக்கு இருக்கின்றது.

அந்த மாற்றத்தை உருவாக்க வேண்டும் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கங்களுக்காக வடக்கு கிழக்கு மலையகம் போன்ற பிரதேசங்களில் உள்ளுராட்சித் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி தனித்துவமாகக் களமிறங்குவதற்குத் தீர்மானித்திருக்கின்றது என்று தெரிவித்தார்.