ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தூய எண்ணங்களோடும் தூய சிந்தனையோடும் தன்னை அபிசேகம் செய்து கொண்டு வெளிப்படையாக தமிழர்களுக்கான ஒரு தீர்வை வழங்க முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பிரமந்தனாறு வட்டாரத்தின் வட்டாரக் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு (29-12-2022) நடைபெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலைகள்

கடந்த காலங்களில் இந்த நாட்டிலே மிகப்பெரும் அழிவுகளுக்கும் இனப்படுகொலைகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே காரணமாக இருந்துள்ளது.

குறிப்பாக 1983 ஆம் ஆண்டு இனப்படுகொலை யாழ். நூலகம் எரியூட்டப்பட்டமை, உள்ளிட்ட மனித குலத்துக்கு எதிரான அழிவுகள் ஐக்கிய தேசியக் கட்சியில் காலத்தில் தான் நடந்தேறின.

அதாவது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக அமைச்சராக பிரதமராக அங்கம் வகித்த காலத்தில் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகள் பெரும் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டது.

வடக்கு மாகாண ஆட்சி முறை

குறிப்பாக 40 வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொடுமைகள் அவருக்கு நேரடியாகவே தெரியும் இவற்றையெல்லாம் விளங்கி கொண்டு தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். தமிழர்களுக்கு ஒரு தீர்வாக வடக்கு மாகாண ஆட்சி முறை கொண்டுவரப்பட்டது.

தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வை வழங்குவதற்காகவே இவ்வாறு கொண்டுவரப்பட்ட வடக்கு மாகாணத்தில் பிரதம செயலாளர் சுகாதாரப் பணிப்பாளர் வருமானவரி பரிசோதகர் என்று பல துறைகளிலும் சிங்களவர்களை நியமித்துள்ளார்கள்.

சிங்களத் தலைவர்கள்

நாட்டில் சிங்களத் தலைவர்கள் மத்தியில் இதுவரை நல்ல சிந்தனைகள் ஏற்படவில்லை.

சிங்கள தலைவர்களுக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் நல்ல எண்ணப்பாடும் சிந்தனைகளும் ஏற்படவில்லை.

இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாங்களும் தங்களை எவ்வளவு தூரம் தயார்படுத்த வேண்டும் என்று அவர்கள் சிந்தித்துக் கொள்ளவில்லை.

தழிழர்களுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற வேண்டும்.

இந்த நாட்டிலே ஒரு அரசியல் தீர்வு சரியாக நடைபெற வேண்டும் என்றால் ரணில் விக்ரமசிங்க தன்னை சுத்தமாக அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.

பேச்சுவார்த்தை மேசையில் ஏமாற்றப்படுகின்றோம்

அப்படி செய்து கொண்டால் தான் அடிப்படை விளங்கும் பழைய அழுக்குகளையும் எண்ணங்களையும் மனதில் வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை மேசையில் பேசிக்கொண்டு இருப்பாராக இருந்தால் பேச்சுக்கள் வெற்றி பெறப் போவதில்லை தொடர்ச்சியாக ஒரு ஏமாற்றமே தமிழர்களுக்கு திரும்பவும் கிடைக்கும்.

ஆகவே நாங்கள் பேச்சுவார்த்தை மேசையில் தோற்கடிக்கப்படுகின்றோம் அல்லது ஏமாற்றப்படுகின்றோம் என்று பார்க்க வேண்டியதில்லை நாங்கள் தோற்றுப் போனவர்கள் இல்லை அவ்வாறு தோற்றுப் போனவர்கள் என்றால் இப்போது அரசாங்கத்திற்கு பேச வேண்டிய தேவை இல்லை.

வெளிப்படையான தீர்வு

சர்வதேசம் ஒரு கருவியாக பார்க்க வேண்டிய தேவையும் இல்லை நாங்கள் 21 ஆம் நூற்றாண்டில் உலகப்பந்தில் ஒரு அடக்குமுறை அரசால் இனப்படுகைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு தேசிய இனம் எங்களுக்கு வரலாறுகள் தந்த பாடத்தின் அடிப்படையில் எங்கள் வரலாற்றை உணர்ந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்புகளோடு இருக்கின்றோம்.

ரணில் விக்ரமசிங்க தன்னுடைய தூய எண்ணங்களோடும் தூய சிந்தனையோடும் ஒரு வெளிப்படையாக தமிழர்களுக்கான ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்ற ஒரு எண்ணப்பாட்டுடன் தனது பேச்சுக்களுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.