தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று தெரிவித்துள்ள, ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உருவாகியுள்ள இந்த சூழலை அனைத்து தரப்புக்களும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் (13.12.2022) இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த விடயம் மீண்டுமொரு முறை வலியுறுத்தப்பட்டது.

மேலும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கிடைத்த பல்வேறு சந்தர்ப்பங்களை தமிழ் தரப்புக்கள் தவறவிட்டிருப்பதாகவும், சந்தர்ப்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்குமாயின் எமது மக்கள் எதிர்கொண்ட பேரழிவுகளை தவிர்த்திருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த 45 வருடங்களாக தொடர்ச்சியாக தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளுடன் சம்மந்தப்பட்டவன் என்ற வகையில், குறித்த விடயங்களை பிரஸ்தாபிப்பதற்கான உரிமை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், புதிய அரசமைப்பு உருவாக்கம், அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் இன ரீதியான பாகுபாடுகள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “சம்பந்தன் அவர்கள் தெரிவித்த கருத்தினை 1987, இலங்கை – இந்திய ஒப்பந்தம் வரையில் நானும் ஏற்றுக்கொள்கின்றேன். அதற்கு பின்னர் உருவாகிய அரசாங்கங்களின் செயற்பாடுகளில் குணாம்ச ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. அதன் காரணமாகவே, தேசிய நீரோட்டத்தில் இணைந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தினை பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையுடன் ஈ.பி.டி.பி. செயற்பட்டு வருகின்றது.

அன்றிலிருந்து தொடர்ச்சியாக, 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதே, சரியான வழிமுறை என்பதையும் வலியுறுத்தி வருகின்றோம். தற்போதைய சூழலில், புதிய அரசியலமைப்பு என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. ஆனால், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற மனோநிலையிலேயே பெரும்பாலானவர்கள் இருப்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது.

அதேபோன்று சக நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் போன்றவர்களும் இப்போது இதே நிலைபாட்டினையே தெரிவித்திருக்கின்றனர்.

எனவே, உருவாகியுள்ள சூழலை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அதிபருக்கும் இடையிலான இச்சந்திப்பில், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச, பிரதமர் தினேஸ் குணர்வதன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட முக்கிய தென்னிலங்கை தலைவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், தமிழ் மக்கள் தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், மனோ கணேசன், ரமேஸ்வரன், ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.