பெரியநீலாவணையில் புதிய கிராம சேவகர் பிரிவொன்றை உருவாக்கும் முயற்சியில் அம்பாரை கச்சேரி தீவிரம்; தமிழ் மக்கள் அதிர்ப்தி!
-/அலுவலக நிருபர்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியநீலாவணை 2 ம் பிரிவில் முஸ்லிம்களுக்கான தனியான கிராம சேவகர் பிரிவொன்றை ஸ்தாபிக்கும் முற்சிகள் நடைபெறுவதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பான கள விஜயமொன்றை அம்பாரை மாவட்ட அரச அதிபர் அண்மையில் மேற்கொண்டிருந்தார். புதிதாக அமையப்பெற இருக்கின்ற கிரமா சேவகர் பிரிவு எல்லைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டே மாவட்ட செயலாளரின் வருகை அமைந்திருந்தது.

இரு வேறுபட்ட சமூகங்களிடையே ஏற்படுத்தப்பட இருக்கும் இவ் விவகாரம் தொடர்பில் தமிழ் மக்கள் தரப்பு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடாது தன்னிச்சையாக முஸ்லிம்களுக்கு பக்கச்சார்பாக நடந்துகொள்ளும் வகையில் மாவட்ட செயலாளரின் வருகை அமைந்திருந்ததாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றர்.

தமிழர்களுக்கு பாதகமாகவே செயற்பட்டுவரும் அம்பாரை மாவட்ட நில அளவை திணைக்களத்தின் பிரதானி மற்றும் திகாமடுல்ல உதவி தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட முஸ்லிம் பிரநிதிகளை மட்டும் உள்ளடக்கிய குழுவினரின் இந்த விஜயம் தாமாகவே எல்லையை நிர்ணயித்துகொள்கின்ற வகையில் இருந்ததாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பிரிக்க முயற்சிக்கப்படும் மக்கள் தொகையும், காணி விஸ்தீரணமும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின்கீழ் வருகின்றபோது இதனை மற்றுமொரு பிரதேச செயலகத்திற்கு தாரைவார்க்கும் அம்பாரை மாவட்ட செயலாளரின் பாரபட்சமான நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், எல்லை நிர்ணய ஆணைக் குழுவுக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் முஸ்லிம்களுக்கு தேவையான வகையில் அரச நியமங்களைமீறும் அதிகாரியாக அவர் செயற்படுவது கல்முனையில் பலவழிகளிலும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதிர்ப்த்தியை ஏற்படுத்தியுள்ளதெனவும் அறியமுடிகின்றது.

முஸ்லிம்கள் பிரிந்தால் அதை அவசியமாக கருதும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், முதல்வர் ரகீப் போன்றவர்கள் தமிழர்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும்போதுமட்டும் கல்முனையில் தமிழ்-முஸ்லிம் உறவு விரிசலடைவதாக நீலிக்கண்ணீர் வடிப்பது எதற்கென்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கனே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ்வரும் கிராம சேவகர் பிரிவுகளின் எல்லைகளை முஸ்லிம்களின் விருப்பிற்கேற்ப இற்றைப்படுத்தி தமிழர்களுக்கு அநீதியை ஏற்படுத்தியுள்ள நில அளவைத்திணைக்களம் பெரியநீலாவணையை 2 ஐ பிரிப்பதன்மூலம் பெரியநீலாவணை கிராமத்தை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துடன் இருந்து பிரித்து தனிமைப்படுத்தும் முஸ்லிம்களின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உத்தரவாதமளித்துள்ளதாக தெரியவருகின்றது.

எவ்வாறாயினும் வட்டார பிரதிநிகள் உள்ளிட்ட உள்ளூர் அரசியல்வாதிகளும் ஊர் பிரமுகர்களும் மாவட்ட செயலாளருக்கு தமிழ் கிராமங்களில் கல்முனை பிரதேச செயலாளரின் அத்துமீறல்கள் தொடர்பிலும், அதற்கு துணைபோகின்ற மாவட்ட செயலாளரின் செயற்பாடுகளையும், வட்டார எல்லையை கிராம சேவகர் எல்லையாக இற்றைப்படுத்துவற்கும் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.