இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உட்கட்சிப்பூசல்களின் எதிரொலியாக கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் விரைவில் – இரண்டொரு வாரத்துக்குள் கூட்டப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினரின் எம்.ஏ.சுமந்திரன் எடுக்கும் தீர்மானங்களுக்கு எதிராகவே கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படத் தீர்மானித்துள்ளனர் என்று அண்மையில் தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கருத்தை ஆதரித்தும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நடவடிக்கைக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்தப் பின்னணியில் – உட்கட்சி மோதல்களால் – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை விரைந்து கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் “எவரும் எனக்கு அழுத்தமேதும் பிரயோகிக்கவில்லை. கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நீண்ட காலமாக கூட்டப்படவில்லை. அதனாலேயே இரண்டொரு வாரங்களுக்குள் அதனைக் கூட்டுவதற்கு கட்சியின் பொதுச்செயலாளருடன் கலந்தாலோசித்துள்ளேன்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் மத்திய குழு கடந்தகாலங்களில் கூடி ஆராய்ந்து வெறும் தீர்மானங்களை மாத்திரமே எடுத்துள்ளதுடன் அவற்றில் எதையுமே நடைமுறைப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.