(கல்லடி நிருபர்)

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 1 ஆம் மற்றும் 2 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறு மூலை வளாகத்தில் இன்று (29) திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பித்து 42 வது ஆண்டை நினைவுகூரும் முகமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக வாரமான ஒக்டோபர் 1 திகதி முதல் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெறும் முதலாவது நிகழ்வாக பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.

குறித்த பொதுப்பட்டமளிப்பு விழாவில் 2506 உள்வாரி, வெளிவாரி பட்டதாரி மாணவர்களுக்கும், பட்டப்பின் தகைமை மாணவர்களுக்கும் பொதுப் பட்டமளிப்பு விழா கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இப்பட்டமளிப்பு நிகழ்வானது இவ்வருடத்தில் நடைபெறும் இரண்டாவது பட்டமளிப்பு நிகழ்வாகவும் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட வேந்தர் ஓய்வு நிலைப் பேராசிரியர் மாநாகப்போடி செல்வராஜா தலைமை வகித்து பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கும் முதலாவது நிகழ்வாகவும் அமைகின்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மேன்மை தங்கிய ஸ்ரீ கோபால் பாக்லே அவர்களும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ந.பஞ்சநாதம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றவுள்ளார்கள்.

இம்முறை நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு நிகழ்வானது கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் அதிக மாணவர்களுக்கான பொதுப்பட்டமளிப்பு நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துட ன் முதன்முறையாக கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பம் மற்றும் முயற்சியாண்மையில் உயிர் முறைமைகள் தொழில்நுட்ப கௌரவ இளமாணி பட்டம் வழங்கப்பட விருப்பதும் சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில் கலாநிதிப்பட்டம் (PhD), முதுதத்துவமாணி (MPhil), விவசாய விஞ்ஞான முதுமாணி MSc(Agric.), முதுகலைமாணி (MA), முதுகல்விமாணி(MEd), வணிக நிர்வாகத்தில் முதுமாணி (MBA), அபிவிருத்திப் பொருளியலில் முதுமாணி (MDE), முகாமைத்துவ பட்டப்பின் டிப்புளோமா ஆகிய123 பட்டப்பின் தகமைகளுக்கான பட்டங்களும், 263 இளமாணிப்பட்டங்களும் முதலாம் நாள் முதலாவது அமர்வில் வழங்கப்படவுள்ளன.

ஏனைய இளமாணிப் பட்டங்களுக்காக 2வது அமர்வில் 313 பட்டதாரி மாணவர்களும், 3வது அமர்வில் 548 பட்டதாரி மாணவர்களும், இரண்டாம் நாள் நிகழ்வில் முதலாவது அமர்வில் 396 பட்டதாரி மாணவர்களும், 2வது அமர்வில் 549 பட்டதாரி மாணவர்களும், 3வது அமர்வில் 314 பட்டதாரி மாணவர்களும் பட்டமளித்து கௌரவிக்கப்படவுள்ளனர்.

பட்டமளிப்பு நிகழ்வுகள் அனைத்தும் பல்கலைக்கழக இணையத்தளத்தினூடாக (www.esn.ac.lk) நேரலையாக பார்வையிட முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் கிழக்கு பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் பேராசிரியர் கலிஸ்ரஸ் எலியாஸ் கருணாகரன், பட்டமளிப்பு விழா – 2021 இற்கான தவிசாளர் பொதுப் பேராசிரியர் மகேஸ்வரன் சிதம்பரேசன், பதிவாளர் அமரசிங்கம் பகீரதன், பிரதிப்பதிவாளர் திருமதி நிசாந்தினி நிருமிதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.