சீனாவின் அறிவியல் ஆய்வு கப்பல் யுவான் வாங்-5 ஆகஸ்ட் 11 ஆம் திகதி, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழையும் என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்தியா தனது தெற்கு பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பில் இந்தியா

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கணினி மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு கண்காணிப்புக்கான செயற்கைக்கோள் தொலைக்காட்சியை நடத்துவதற்காக சீன அறிவியல் ஆய்வுக் கப்பல் யுவான் வாங்-5 சீனாவின் 99 வருட குத்தகை கட்டுப்பாட்டில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருவதாக அறிவிக்கப்படுள்ளது.

மியான்மார் முதல் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் வரையிலான சீனாவின், உட்கட்டமைப்பு முன்முயற்சிகளின் இரட்டைப் பயன்பாட்டு சேவைகள் குறித்து இந்தியா நீண்ட காலமாக அவதானித்து வருகிறது.

இலங்கை வரும் சீனக் கப்பல் ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் இருந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் அறிவியல் ஆய்வு கப்பல்

இந்தநிலையில், இந்திய பெருங்கடல் பகுதியின் வடமேற்கு பகுதிக்குள் கணினி மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு கண்காணிப்புக்காக இந்த கப்பல் செயற்கைக்கோள் ஆய்வுகளை நடத்தலாம் என்று இலங்கையின் பட்டுப் பாதை முன்முயற்சியின் பணிப்பாளர் ரணராஜா தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டுக்கு பின்னர் சீன கடற்படை கப்பல் ஒன்று, இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

2014 ஆம் ஆண்டில், சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று, கொழும்பில் நங்கூரமிட்டமை இந்தியாவின் கோபத்தை தூண்டியது.

சீனாவின் யுவான் வாங்-5 விண்வெளி கண்காணிப்பு கப்பல், விண்வெளி மற்றும் தரைக்கு இடையில் தகவல் பரிமாற்றத்தை நடத்துகிறது மற்றும் குறிப்பாக Zhongxing-2E செயற்கைக்கோளுக்கு குறிப்பிடத்தக்க தரவுகளை வழங்குகிறது.

தற்போது இந்த கப்பல் தாய்வானை கடந்து இலங்கையின் ஹம்பாந்தோட்டை நோக்கி பயணிக்கிறது என்று இலங்கை அதிகாரி ரணராஜா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

யுவான் வாங்-5 என்பது யுவான் வாங் வரிசையின் மூன்றாம் தலைமுறை கண்காணிப்புக் கப்பலாகும். மேலும் இது 2007 இல் சேவையில் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.