( வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் (EPDOTU) சிறப்புப் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில், சங்கத் தலைவர். முஸம்மில் அபுசாலி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் முஸம்மில் அபுசாலி உரையாற்றுகையில்..
கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளையும் நலன்களையும் வென்றெடுப்பதற்காக சங்கம் தொடர்ந்தும் அயராது பாடுபடும் என்றும்
உத்தியோகத்தர்களின் ஒற்றுமையே சங்கத்தின் பலம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சங்கத்தின் செயலாளர் என்.விமலகாந் கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தற்போதைய நிலை, எதிர்கால இலக்குகள் மற்றும் இதுவரை சங்கம் ஈட்டியுள்ள சாதனைகள் தொடர்பான விரிவான வழிவரைபடத்தை (Roadmap) சபை முன் சமர்ப்பித்து விளக்கமளித்தார்.
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட EPDOTU இன் கணக்காய்வாளரும் பட்டயக் கணக்காளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதம கணக்காளருமான எஸ். ஏ. சசிகரன் உரையாற்றுகையில், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் மாத்திரமே தங்களது இலக்குகளை வெற்றிகரமாக அடைய முடியும் என்பதை வலியுறுத்தினார். மேலும், உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கூட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் கூட்டமைப்பின் செயலாளர் தம்மிக முனிசிங்க, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதுடன், அவற்றுக்குத் தீர்வு காண எவ்வாறு செயற்பட வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எவ்வாறு அடைய வேண்டும் என்பது குறித்தும் தெளிவாக விளக்கமளித்தார்.
ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாறல்களுடனும் எதிர்கால உத்திகள் தொடர்பான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.









