ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்
பல்கலை மாணவர்களுக்கு
மடி கணனி அன்பளிப்பு.!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 24ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இன்று (08) இடம்பெற்றது.

ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக சுயாதீன தொலைக்காட்சி தமிழ் செய்திப் பிரிவு முகாமையாளர் முஹம்மட் இர்ஃபான், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை முன்னாள் தயாரிப்பாளர் எம்.எச்.எப். ரின்ஸா, எஸ்.கே.குயின்ஸ் கம்பஸ் ஸ்தாபகர் விரிவுரையாளர் கலாநிதி சப்னா சிபான், எப்.எம்.ராஜ் குமரன் ராஜ் குமரி நிலையத்தின் பணிப்பாளர் பாலில் முபாரக், ரிக்கா டிரேடர்ஸ் உரிமையாளர் ரிகாஸா மஸாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் தமிழன் பத்திரிகை இணை ஆசிரியர் ஏ.எம்.ஜௌபர், சுயாதீன தொலைக்காட்சி நிறுவன தமிழ் செய்திப் பிரிவு முன்னாள் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா, அமைப்பின் பணிப்பாளர் மரியம் ஹாஷிம் உமர், இணைப்பாளர்களான ஆகிப் மொஹமட் இஸ்ரத் மற்றும் பெற்றோர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது எம்.ஏ.அமாயா (திஸ்ஸபுர பதுளை), எஸ்.எப்.இபா (நற்பிட்டிமுனை), என்.லக்ஷிகா (கொடிகாமம், மிருசுவில்), எம்.ஆர்.எப்.றைஹானா (கலேவலை) மற்றும் பீ.கே.ரஸ்தா (வல்லவ) ஆகியோருக்கு மடி கணனிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதேவேளை ஹாஷிம் உமர் பௌண்டேசனின் நலிந்த ஊடகவியலாளர்களுக்கு கரம் கொடுக்கும் திட்டத்தின் கீழ் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான கலைச் செல்வன் ரவூப், மர்ஹூம் நவாஸ் சார்பாக அவரது மனைவி ஹபீலா நவாஸ் ஆகியோருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா அன்பளிப்புவழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

அத்துடன் எழுத்தாளர் சஹேலா சபேல் எழுதிய அன்ஷேக்கன் என்ற நூலும் வெளியிடப்பட்டது. இதன்போது நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் தம்பதியர் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள இரண்டு தமிழ் பாடசாலைகளுக்கென ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் ஒரு தொகுதி புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இப்புத்தகங்களை சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா பெற்றுக் கொண்டார்.

இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு அதிதிகளுக்கு அன்பளிப்புக்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.