(ஷனா )
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக அண்மையில் பதவியேற்ற டொக்டர் என்.சரவணபவன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை (04) மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களைச் சந்தித்து, பிராந்தியத்தின் சுகாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அவர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது, சுகாதார அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டமொன்றும் பணிமனையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில், பிராந்திய பணிப்பாளர், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய பிரிவுத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
கல்முனை பிராந்தியத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பிரிவுகள் ரீதியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மாகாண பணிப்பாளர் கேட்டறிந்து கொண்டார். அத்துடன், சுகாதார சேவையில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவசர தேவைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
கல்முனை பிராந்தியத்தில் சுகாதார சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் சுட்டிக்காட்டப்பட்ட அவசர தேவைகளுக்கும், சவால்களுக்கும் விரைவான தீர்வுகளை வழங்குவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இங்கு உரையாற்றும்போது தெரிவித்தார்.













