(ஜலீல் ஜீ)

“மாணவத் தூதுவர் திட்டம் வெறும் நிர்வாக நடவடிக்கையாகக் கருதப்படக் கூடாது. ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், எதிர்காலத்தில் பொறுப்புள்ள நல்ல குடிமக்களை உருவாக்கும் நீண்டகால முதலீடாக அமைய வேண்டும்” என சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் தரம் 10 மாணவ தூதுவரும், இளம் சுற்று – சூழலியல் செயற்பாட்டாளருமான மின்மினி மின்ஹா தெரிவித்தார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் அம்பாறையில் 04 செவ்வாய்க்கிழமை அம்பாறை கச்சேரி ஏ.ஐ. விக்கிரம கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாவட்ட மாணவத் தூதுவர் மாநாட்டில் உரையாற்றிய ஒரேஒரு மாணவியாகப் பங்கேற்ற அவர், மாணவர் தலைவர்கள் தமது பொறுப்புகளை தெளிவாகப் புரிந்துகொண்டு செயற்படுவதுடன், மாணவர்களிடையே விழிப்புணர்வையும் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்க்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார்.

புதிய மாணவர் தலைவர்கள் நியமிக்கப்படும் போது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தயக்கம், திட்டங்கள் குறித்த தெளிவின்மை மற்றும் மாணவர்களிடையே போதிய புரிதல் இல்லாமை போன்ற காரணங்களால் பல்வேறு சவால்கள் எழுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சில பாடசாலைகளில் ஒழுக்க விழுமியங்களும் உயரிய பண்புகளும் பலவீனமடைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றை மேம்படுத்த ஆசிரியர்களின் வழிகாட்டலும் தொடர்ச்சியான ஆலோசனைகளும் இன்றியமையாதவை என்றார்.

அம்பாறை மாவட்ட ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைந்து தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கங்களை நடைமுறைப்படுத்தினால், பாதுகாப்பானதும் ஒழுக்கமிக்கதுமான சிறந்த பாடசாலைச் சூழலை உருவாக்க முடியும் என்றும் மின்மினி மின்ஹா வலியுறுத்தினார்.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான எஸ். ஜெயராஜன், ஜனாபா பானு ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் திருமதி தாயாணி கமக்கே கௌரவ அதிதியாகவும், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் ஐ.எல்.எம். ரிபாஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 102 தமிழ், சிங்கள,முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைமைத் தூதுவர்கள் மாநாட்டில் பங்கேற்று, மாணவர் தலைமைத்துவம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றுக்கொண்டனர்.