(செல்வி வினாயகமூர்த்தி)

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பொத்துவில் கோட்டம் (தமிழ்ப் பிரிவு), திருக்கோவில் கோட்டம் மற்றும் ஆலையடிவேம்பு கோட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த பாடசாலைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 220 மாணவர் தலைவர்களுக்கும், உளவளத் துணை ஆசிரியர்கள் மற்றும் உளவளத் துணைப் பாடத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட 30 ஆசிரியர்களுக்கும் என மொத்தம் 250 பேருக்கான உளவள மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டு செயலமர்வு இன்று (02) ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், இந்தியாவிலிருந்து வருகை தந்த வளவாளர்கள் மாணவர்களுக்கு தலைமைத்துவப் பண்புகள், தன்னம்பிக்கை, ஒழுக்கம், ஆளுமை மேம்பாட்டு விருத்தி எதிர்காலக் கல்விப் பயணம், கிடைக்கும் வாய்ப்புகளைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துதல், சமூகப் பொறுப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினர். இதன் மூலம் மாணவர்களின் தலைமைத்துவத் திறன், முடிவெடுக்கும் ஆற்றல், தொடர்பாடல் திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்கம் அதிகரிக்கப்படுவதுடன் கல்வியின் முக்கியத்துவம், பாடசாலை வருகையின் அவசியம், இடை விலகலைத் தவிர்த்தல் மற்றும் சமூக முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்கு. மேம்படுதல் அதிகரிக்கும்.அதேவேளை உளவளத் துணை ஆசிரியர்கள் மற்றும் உளவளத் துணைப் பாடத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஸ்ரீமத் சுவாமி பிரம்ம ஞானானந்த மகராஜ் அவர்களால் உளவள ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி பிரம்மஞானானந்த மகராஜ், வளவாளர்களான பாரதிராஜா தங்கப்பளம், மோகன்ராஜ் கோவிந்தசாமி, கார்த்திகேயன் நடராஜன், ராம் பாலாஜி மற்றும் சத்தியபிரகாஷ் சேகரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கினர். பயிற்சி நிறைவில் வளவாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

மேலும், திருக்கோவில் வலயத்தின் வணிகக் கல்விக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் கே. பிரபாகர், சிறுவர் முன்பள்ளி இணைப்பாளர் எஸ். விவேகானந்தராஜா, ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோ. செல்வம், அதிபர்கள், ஆசிரியர்கள், அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத் தலைவர் த. கைலாயபிள்ளை, மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You missed