( வி.ரி. சகாதேவராஜா)

“இராமகிருஷ்ண மிஷனின் பணிகளில் கல்விக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வியுடன் நல்லொழுக்கம், ஒழுக்கம் மற்றும் ஆன்மீக விழுமியங்களும் கற்பிக்கப்படுகின்றன”

 இவ்வாறு, மட்டக்களப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ்,  அவுஸ்திரேலியாவிலிருந்து நேரடியாக விஜயம் செய்த ஒஸ்கார் முன்னாள் தலைவரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான  காரைதீவைச் சேர்ந்த கந்தசாமி பத்மநாதனிடம்( ராஜன்) தெரிவித்தார்.

“மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்  நூற்றாண்டு விழா”தொடர்பான கலந்துரையாடலின்போது,  ஒஸ்கார் முன்னாள் தலைவரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான கந்தசாமி பத்மநாதனுடன்( ராஜன்) திருமதி ராஜேஷ் பத்மநாதன், மிஷன் ஆர்வலர் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா, ஓய்வுபெற்ற பிரதம பொலீஸ் பரிசோதகர் உ.தேவதாஸ் மற்றும் சமூக செயற்பாட்டாளர் த.கிரிஷாந்த் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

முன்னதாக,  அவுஸ்திரேலியாவிலிருந்து நேரடியாக விஜயம் செய்த ஒஸ்கார் முன்னாள் தலைவர் கந்தசாமி பத்மநாதன்( ராஜன்) தம்பதியர் சுவாமிகளிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றனர். சுவாமிகள் ஆன்மீக நூல்களையும் வழங்கி வைத்தார்.

அங்கு, மிஷன் பணிகள் பற்றி ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் மேலும் கூறுகையில்..

இலங்கையில் ஆன்மீகப் பணிகளையும் சமூக நலச் சேவைகளையும் ஒருங்கிணைத்து அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வரும் ராமகிருஷ்ண மிஷன், மனிதநேய சேவையில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.

 “மனிதனைச் சேவிப்பதே இறைவனைச் சேவிப்பதாகும்” என்ற சுவாமி விவேகானந்தரின் உயரிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, கல்வி, சுகாதாரம், சமூக நலன், பேரிடர் நிவாரணம் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வு போன்ற பல துறைகளில் மிஷன் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறது.

ராமகிருஷ்ண மிஷன் கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது. 

கல்வி நிறுவனங்கள், மாணவர் விடுதிகள், நூலகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், மருத்துவ உதவிகள், கிராமப்புற முன்னேற்றத் திட்டங்கள், முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான உதவிகள் போன்ற பல்வேறு சேவைகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

மிஷனின் பணிகளில் கல்விக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.

 மாணவர்களுக்கு தரமான கல்வியுடன் நல்லொழுக்கம், ஒழுக்கம் மற்றும் ஆன்மீக விழுமியங்களும் கற்பிக்கப்படுகின்றன. அதேவேளை, மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள், இலவச மருந்து வழங்கல் மற்றும் சமூக சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதிலும் ராமகிருஷ்ண மிஷன் முன்னணியில் செயல்பட்டு வருகிறது. 

உணவுப் பொருட்கள், குடிநீர், உடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இளைஞர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும் மிஷன் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

 தொழிற்பயிற்சிகள், கணினி பயிற்சிகள், ஆங்கில மொழிக் கல்வி, சுயதொழில் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றின் மூலம் இளைஞர்களை தன்னம்பிக்கையுடன் சமூகத்தில் முன்னேற ஊக்குவிக்கிறது.

மேலும், பெண்கள் அதிகாரமளிப்பு, கிராம அபிவிருத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரநடுகை, ஆன்மீக வகுப்புகள், யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் போன்ற பல்வேறு சமூகப் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

எதிர்காலத் திட்டங்களாக, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கல்வி மற்றும் பயிற்சி மையங்கள், சமூக சேவைத் திட்டங்களின் விரிவாக்கம், மாணவர் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்கள், புதிய மருத்துவ சேவைகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை ராமகிருஷ்ண மிஷன் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

மனிதநேயம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படும் ராமகிருஷ்ண மிஷன், இலங்கையின் சமூக முன்னேற்றத்தில் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது. அதன் சேவைகள் எதிர்கால தலைமுறைகளுக்கும் வழிகாட்டியாக அமையும் என்றார்.

You missed