கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதன்மை உளவளத்துணையாளர்களின் ஒன்றுகூடல் நிகழ்வானது முதன்மை உளவளத்துணையாளர் திரு.முத்துராஜா புவிராஜா அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற பவளகாந்தன் மண்டபத்தில் 2026.08.01 சனிக்கிழமையன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான முதன்மை உளவளத்துணையாளர்கள் பங்குபற்றி இருந்தனர்.
இந்நிகழ்வின் போது உளவளத்துணை சேவையின் அனுபவப் பகிர்வுகள், பயிற்சிக் கால நினைவுகளும் கவிதை, பாடல்கள், சிறுகதை போன்ற கலை நிகழ்ச்சிகளும் மகிழ்ச்சிகரமான விளையாட்டுகளும் இடம்பெற்றன. இதன்போது ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் யாழ் பல்கலைக்கழகமும் இணைந்து ஜேர்மன் தொழிநுட்ப நிறுவனத்தின் (GTZ/GIZ) நிதியுதவியுடன் 2003 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் முதன்மை உளவளத்துணையாளர்களுக்கான பயிற்சியை தெரிவு செய்யப்பட்ட சுமார் 148 ஆசிரியர்களுக்கு கட்டம் கட்டமாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் தயா சோமசுந்தரம், திருமதி கோகிலா மகேந்திரன் மற்றும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் திரு.சுந்தரம் டிவகலாலா ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ் முதன்மை உளவளத்துணையாளர் பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினாலும் மற்றும் சுனாமி ஆழிப் பேரலை அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட மாணவர்களை இயல்பு நிலைக்கு கொணர முதன்மை உளவளத்துணையாளர்கள் ஆற்றிய சேவை அளப்பரியதாகும்.







