பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் பாரிய நிதி மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பொலிஸ் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கி இணைந்து நடத்திய நிதியறிவு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரிய நீலாவணை பகுதியில் உள்ள மாநகர கேட்போர் கூடத்தில் இன்று (22) காலை நடைபெற்றது.
பொலிஸ் மா அதிபர் மற்றும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய திருகோணமலையில் இடம்பெற்ற பூர்வாங்கக் கலந்துரையாடலைத் தொடர்ந்துஇ இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்கவின் நேரடி அவதானிப்பின் கீழ் இந்த விழிப்புணர்வுத் தொடர் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் அம்பாறை பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்ல இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
அம்பாறை பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்ல இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்த கொண்டு உரையாற்றிய வேளை அம்பாறை மாவட்டத்தில் பரவலாக இடம்பெற்று வரும் திட்டமிட்ட நிதி மோசடிகள் மற்றும் போலி முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விரிவான விளக்கமளித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ‘இந்த நிதி மோசடி வலைக்குள் அம்பாறை நகர மக்கள் மட்டுமல்லாது பல கிராமப்புற மக்களும் வீழ்ந்துள்ளனர். மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் படித்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறைப் பணியாளர்கள் கூட இவ்வாறான மோசடிக்காரர்களிடம் பெருந்தொகை பணத்தை இழந்து ஏமாந்துள்ளனர். இந்த அபாயகரமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி எமது கிராமத்து மக்களை மோசடிக்காரர்களிடமிருந்து பாதுகாப்பதே எமது பிரதான நோக்கமாகும்’ எனக் குறிப்பிட்டார்.
இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் கே. பிரபாகரன் மற்றும் பிராந்திய முகாமையாளர் ரி .சஞ்ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு சட்டவிரோத பிரமிட் திட்டங்கள் மற்றும் இணையவழி நிதி மோசடிகளிலிருந்து எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து தெளிவுபடுத்தினர்.
இதன் போது மத்திய வங்கி அதிகாரிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி , பெரிய நீலாவணை, சாய்ந்தமருது ,சவளக்கடை ,சம்மாந்துறை ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பிராந்தியத்தின் கிராம அலுவலர்கள் சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் நிலவும் நிதி மோசடிகளின் தீவிரத்தன்மை குறித்து மத்திய வங்கியின் அதிகாரிகளால் ஆக்கபூர்வமான சொற்பொழிவுகள் மற்றும் ஆலோசனைகள் கலந்து கொண்டோருக்கு விளக்கமாக வழங்கி வைக்கப்பட்டன..
இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பதிவாகும் நிதி மோசடிப் புகார்களைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மக்கள் தங்களது கடின உழைப்பால் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் மோசடிக்காரர்களால் சூறையாடப்பட்டுள்ளது. நிதி மோசடி தொடர்பான விசாரணைகளும் இழந்த பணத்தை மீட்பதும் மிகவும் சிக்கலான ஒரு செயல்முறை என்பதால் பொதுமக்கள் ஏமாற்றப் படாமல் இருப்பதே இதற்கான ஒரே தீர்வு என இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் தத்தமது உரையில் சுட்டிக்காட்டினர்























