மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளியைப் பூர்வீகமாகவும், பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் விவேகவெளி தமிழேந்திரன் (சரவணமுத்து நவேந்திரன்) இயற்றிய ‘தெய்வீக கானங்கள்’ எனும் பக்தி இசைத்தட்டின் வெளியீட்டு விழா, நாவிதன்வெளி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வளாகத்தில் ஆசிரியர் ஆலோசகர் எம். லக்குணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ கன. மாதவராஜா அவர்களின் ஆசீர்வாதத்துடன் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது.


இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இசைத்தட்டை வெளியிட்டு வைத்தார்.


கௌரவ அதிதிகளாக ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்களான வரதராஜன், குணசேகரன், ஓய்வுநிலை அதிபர்களான கணேசமூர்த்தி, கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் ஆசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.


விவேகவெளி தமிழேந்திரன் எழுதிய 12 பக்திப் பாடல்களை உள்ளடக்கிய ‘தெய்வீக கானங்கள்’ இசைத்தட்டில், நாவிதன்வெளி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் வரலாற்றுப் பெருமை, தொன்மை, இறையருள், அற்புதங்கள் மற்றும் பக்தியின் மகத்துவம் ஆகியவை இனிமையான இசையுடனும் ஆழமான வரிகளுடனும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பக்தி உணர்வைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல்கள், அனைத்து தரப்பினரும் ரசித்து கேட்கும் வகையில் அமைந்துள்ளதுடன், ஆலயத்தின் ஆன்மிகப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறப்புமிக்க படைப்பாகவும் அமைந்துள்ளது.