சிறுத்தையால் சுப்பிரமணிக்கும் அடியார்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்;
காட்டுக்குள் சுப்பிரமணி செல்வதற்கு வாய்ப்பில்லை!
வனஜீவராசிகள் திணைக்களம் அறிவிப்பு


( வி.ரி.சகாதேவராஜா)

சமகாலத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் கூடுதலாக இருப்பதால் அது சுப்பிரமணிக்கும் அடியார்களுக்கும் பாதிப்பு ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன.
எனவே
காட்டுக்குள் சுப்பிரமணியை கொண்டு செல்வதற்கு வாய்ப்பில்லை.

இவ்வாறு வனஜீவராசிகள் திணைக்கள சட்ட ஆலோசகரும்சுற்றாடலியலாளருமான கந்தையா பிரியதர்சனி தெரிவித்தார்.

சுப்பிரமணிக்கு காட்டுக்குள் செல்ல அனுமதி மறுப்பு என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியதைத் தொடர்ந்து நாம் அவருடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கதிர்காம பாதயாத்திரை குழுவினருடன் வரும் சுப்பிரமணி எனும் செல்லப்பிராணி சமூக வலைத்தளங்களில் உலகளாவிய ரீதியில் பிரபல்யமாகியுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில்..
குறித்த செல்லப்பிராணி பாதயாத்திரை செல்வது பிரச்சினை அல்ல ஆனால் காட்டிற்குள் பயணிக்கும் சகமனிதர்களின் பாதுகாப்பினையும் பாதயாத்திரை மேற் கொள்ளும் செல்லப்பிராணியின் பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு சுப்பிரமணியை காட்டிற்குள் செல்ல வனஜீவராசிகள் திணைக்களம் அனுமதி வழங்காது எனக் குறிப்பிட்டார்.

காட்டுப்பாதை ஜுலை 9 அல்லது 10 இல் திறப்பதற்கு முன் பாணமையில் வைத்து சுப்பிரமணியை நாம் பொறுப்பெடுத்து பின்னர் பாதை திறக்கும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் ஆலய குருவின் வேண்டுகோளுக்கு இணங்க அனுமதித்து பின்னர் நாம்
வாகனம் ஊடாக கதிர்காமத்திற்கு கொண்டு செல்வோம்.

அங்கு பிள்ளையாரடி எனும் இடத்தில் பாதயாத்திரை குழுவிடம் சுப்பிரமணியை ஒப்படைக்க இருக்கிறோம்.

அதன் பின்னர் அவர்களில் ஒரு அடியார் சுப்பிரமணியை கொண்டு செல்ல இருப்பதால் பிரச்சினை இல்லை என்றார்.

அத்துடன் உகந்தை காட்டுப்பாதை ஆரம்பிக்கும் பாணமை எனும் இடத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் விவசாயிகள் இருவர் சிறுத்தை தாக்கி மரணமடைந்துள்ளதாகவும் இரண்டு செல்லப்பிராணிகள் சிறுத்தை தாக்குதலுக்குட்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.