அரச வருவாய் நிறுவனங்களில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தல்
இலங்கையில் ஊழல் ஒழிப்பு மற்றும் நல்லாட்சியை வலுப்படுத்தும் நோக்கில், முக்கிய அரச வருவாய் நிறுவனங்களின் நேர்மைத்தன்மை மற்றும் உள்ளக கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், 2025–2029 தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டன.
குறிப்பாக இலங்கை சுங்கத் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களங்களில் இயங்கும் உள்ளக விவகாரப் பிரிவுகளின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், அரச நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எஸ்.கே. லியனகம, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் ஆர்.பி.எச். பெர்னாண்டோ, மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பேமரத்ன உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
