அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றமான போர் சூழ்நிலையைத் தொடர்ந்து, உலகின் முக்கிய கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக சோமாலியக் கடற்கரைப் பகுதிகளில் கடற்கொள்ளையர் அச்சுறுத்தல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களிலேயே பல கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் முற்றுகையிடப்பட்டு கடத்தப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
சோமாலியக் கடற்கரை மற்றும் சோமாலியப் படுகைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த அபாய நிலையை அடுத்து, கூட்டு கடல்சார் தகவல் மையம் அப்பகுதிக்கான அச்சுறுத்தல் எச்சரிக்கை மட்டத்தை “தீவிரம்” என உயர்த்தியுள்ளது.
கடந்த ஒரு தசாப்த காலமாக சர்வதேச கடற்படைகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் சோமாலியக் கடற்கொள்ளைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. எனினும், கடந்த ஏப்ரல் இறுதியிலும் மே மாத தொடக்கத்திலும் வடக்கு சோமாலியாவின் புன்ட்லாண்ட் கடற்கரைப் பகுதியில் ஒரே வாரத்தில் மூன்று கப்பல்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனால் தனிப்பட்ட தாக்குதல்களாக இருந்த சம்பவங்கள் தற்போது ஒருங்கிணைந்த கடற்கொள்ளை நடவடிக்கைகளாக மாறிவருவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், செங்கடலின் தெற்குப் பகுதியில் உள்ள பாப் அல்-மந்தேப் நீரிணை உலக வர்த்தகத்திற்கான மிக முக்கிய கடல்வழியாக மாறியுள்ளது. சவூதி அரேபியா உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களது எண்ணெய் ஏற்றுமதி நடவடிக்கைகளை செங்கடல் துறைமுகங்கள் வழியாக மேற்கொள்வதால், எண்ணெய் டாங்கிகள் தற்போது கடற்கொள்ளையர்களின் முக்கிய இலக்குகளாக மாறியுள்ளன.
மேலும், கொள்ளையடிக்கப்பட்ட அரேபிய கடற்றொழில் படகொன்று தற்போது கொள்ளையர்களின் “தாய் கப்பலாக” பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன்மூலம் சிறிய படகுகளுக்கு எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு நீண்ட தூர கடற்கொள்ளை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த 2024 செப்டம்பரில் 6 ஊழியர்களுடன் பயணித்த “லொரென்சோ புதா ஐஏ” என்ற இலங்கை கடற்றொழில் படகு சோமாலியக் கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்தது. பின்னர் இலங்கை, இந்தியா, சீஷெல்ஸ் மற்றும் பஹ்ரைனில் உள்ள கூட்டுக் கடற்படை இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் மூலம் கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கையின் கடற்றொழில் அமைச்சு, மேற்கு இந்தியப் பெருங்கடலில் கடற்கொள்ளை அச்சுறுத்தல் குறித்து பாதுகாப்பு பிரிவுகளிடமிருந்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ எச்சரிக்கையும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது. இதனால் ஆழ்கடலுக்குச் செல்லும் இலங்கை மீனவர்களுக்கு இதுவரை விசேட பாதுகாப்பு வழிகாட்டல்கள் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.