மின்சாரக் கட்டணம் 18% உயர்வு: நாளை நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமல்!
….
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளை முன்னிட்டு, வீட்டு பயன்பாட்டில் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கான மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் உயர்த்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுகுறித்து விளக்கமளித்த ஆணைக்குழு, அரசாங்கம் 15 பில்லியன் ரூபா மானியத்தை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதால், இந்த கட்டண உயர்வு மொத்த மின் நுகர்வோரில் சுமார் 5 சதவீதமானோருக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தது.
இதன் காரணமாக, 95 சதவீத வீட்டு மின் நுகர்வோருக்கு எந்தவித கட்டண உயர்வும் இடம்பெறாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, மாதாந்தம் 0-30, 31-60, 61-90, 91-120 மற்றும் 121-180 அலகுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு தற்போதைய கட்டணமே தொடரும்.
புதிய மின்சாரக் கட்டண திருத்தம் நாளை (10) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

