( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர் மாட்டுப்பளை  மடத்தடி  ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின்  வருடாந்த அலங்கார உற்சவம் நாளை (22) புதன்கிழமை ஆரம்பமாகிறது .

உற்சவகால பிரதம குரு வித்யா பிரவீணா சிவஸ்ரீ  அ.மு.நிஷாந்தன் குருக்கள் தலைமையில் , ஆலய குரு சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்கள் சமுகத்தில் வருஷாபிஷேக கிரியைகள் நடைபெறவுள்ளன.

 தொடர்ச்சியாக ஒன்பது தினங்கள் பகல்  அலங்கார உற்சவ திருவிழாக்கள் இடம் பெற்று எதிர்வரும் 01ஆம் தேதி  வெள்ளிக்கிழமை  சித்ரா பௌர்ணமி அன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது .

26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி இடம் பெற ஏற்பாடாகி உள்ளது.

இந்த பத்து நாள் அலங்கார உற்சவ திருவிழாக்காலங்களில் காலை 10 மணிக்கு கும்ப பூஜையுடன் ஆரம்பமாகி பகல் ஒரு மணிக்கு அலங்கார உற்சவ பிரதான பூஜை, அம்பாளின்  வீதியுலா இடம் பெறும். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தினமும்  அன்னதானம் வழங்கப்படும்  என ஆலய பரிபாலன சபை தலைவர் கி.ஜெயசிறில் தெரிவித்தார்.

பத்து தினங்களுக்கான உற்சவகால திருவிழாக்களையும் அன்னதானத்தையும்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பிரதேசங்களான சம்மாந்துறை திருக்கோவில் பொத்துவில் ஆலையடிவேம்பு நாவிதன்வெளி கல்முனை காரைதீவு நிந்தவூர் அட்டப்பள்ளம் ஆகிய கிராமங்கள் பொறுப்பேற்று நடாத்துகின்றன.

 மேற்கூறிய உற்சவ காலங்களில் ஆலயத்திற்கு வருகைதந்து உற்சவத்தில் கலந்து கொண்டு திருவருள் பெற்றுய்யுமாறு பரிபாலன சபையினர் வேண்டுகோள்  விடுத்துள்ளனர்.