நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலய கும்பாபிஷேகம் நேற்று!

அதனையொட்டிய சிறு கட்டுரை இது.

ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த நிந்தவூர் முருகன் ஆலயம்  மீண்டும் நேற்று கும்பாபிஷேகத்துடன் புத்துயிர் பெற்றது

ஆலயத்தை அழகுற நிருமாணித்த அவுஸ்திரேலியாவில் வாழும் நிந்தவூரை பூர்வீகமாக கொண்ட இராமலிங்கம் ரவீந்திரதேவன் தலைமையில் இம் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது

கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெறும் இப் பெருவிழாவின் தொடக்கமாக (03.04.2026) நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கிரியைகள் ஆரம்பமாகியது.

நேற்று (04.04.2026) சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இன்று (05.04.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 8.35 மணி முதல் 20.16 மணி வரையான சுப முகூர்த்த நேரத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

ஆலய வரலாறு:

ஆம், 

இந்த பொற்கோவிலை நிர்மாணித்து வரும் அக் கோயிலின் பூர்வீக பரம்பரையில் வந்த  ராமலிங்கம் ரவிந்திர தேவன் அவர்களை சந்தித்தபோது அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இவை.

நிந்தவூரிலே ஆயிரம் வருடங்களுக்கு முன்பு எனது மூதாதையரான கந்தையாபிள்ளை என்பவரால் இவ் ஆலயம் அன்று சிறிய அளவில் அமைக்கப்பட்டது.

 இதற்கு காரணம் கதிர்காம பாதயாத்திரை.

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கி பாதயாத்திரை வருபவர்கள் இங்கு தங்கி செல்வது வழமை.

அந்தக் காலத்தில் இங்கு வந்த கதிர்காம பாதயாத்திரீகர்கள் இவ் ஆலயத்திற்கு( அன்று இது இல்லை ) முன்னால் உள்ள ஒரு  வாகை மரத்தின் கீழ் சிறிய முருகன் சிலையை வைத்து வழிபட்டு சென்றார்கள்.

இதனைக் கண்ட எமது மூதாதையர் கந்தையா பிள்ளை குறித்த முருகன் சிலையை வைத்து ஆலய மொன்று அமைக்க விரும்பினார்.

எனவே அந்த இடத்திலே ஒரு  காணியை வாங்கி அந்த முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து சிறு கோயிலை அமைத்தார் .

நிந்தவூரில் அன்று  வாழ்ந்த கணிசமான தமிழ் மக்களுக்கு வணக்கத்திற்கான ஒரு தலமாக அன்று இது விளங்கியது.

அதனைத் தொடர்ந்து எனது தந்தையார் கந்தையாபிள்ளை ராமலிங்கம் 1950ல் இருந்து 80 வரை அந்த சிறு ஆலயத்தின் தர்மகத்தாவாக இருந்து அதனை சிறப்பாக நடத்தி வந்தார்.

இருந்த பொழுதிலும் இலங்கையில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலை இனவன்முறை காரணமாக இரண்டு தடவைகள் இந்த ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டது.

 இறுதியாக 1986,  87 களில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு மண்ணுள் புதைக்கப்பட்டன.

அதாவது முற்றாகவே அழிக்கப்பட்டது.

 இதன் பின்பு இந்த ஆலய வளவை எனது தந்தையாரின் தம்பி காரைதீவைச் சேர்ந்த வேதநாயகம் என்பவர் பரிபாலித்து வந்தார். ஆனால் ஆலயம் இல்லை .கோயிலை வளைத்து மதில் கட்ட புறப்பட்ட  நேரத்தில் அவரும் மரணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது .

அவ்வேளையில் நாம் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா வந்தோம்.எனது தந்தையார் ராமலிங்கம் அவர்கள் இறக்கின்ற தருவாயிலே என்னை அழைத்து “நிந்தவூர் கோயிலை விட்டுவிடக் கூடாது.

 நீ சிட்னியில் இருந்தாலும் அங்கு சென்று அதனை மீள அமைத்து பக்தர்களுக்கு வழிபாடு இயற்றுவதற்கு ஏற்ற வகை செய்ய வேண்டும்” என்று என்னிடம் கேட்டுக் கொண்டார் .

அந்த உறுதி மொழியை காப்பாற்றுவதற்காகவே நான் இங்கு வந்து இந்த மூன்று மாத காலமாக அட்டப்பள்ளத்தில் தங்கியிருந்து இந்த ஆலயத்தை புதிதாக நிர்மாணித்து வந்தேன்.

 இன்று அது முதலாவது மகா கும்பாபிஷேகம் காண்பதையிட்டு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

  ஒவ்வொரு வருடமும் கதிர்காம பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு இங்கு உணவளித்து தங்க இடமளித்து நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த கும்பாபிஷேகத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பின் தர வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

 எனக்கு நிந்தவூர் முருகனும் கதிர்காம முருகனும் எனக்கு வழிகாட்டியதன் பலனாக இது கைகூடி இருக்கின்றது .இது ஒரு தெய்வ காரியம். அவ்வளவுதான். 

வணக்கம்.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா

காரைதீவு  நிருபர்.