​( வி.ரி.சகாதேவராஜா)

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 79 ஆவது சிரார்த்ததின விழா, நுவரேலியா கொத்மலை பூண்டுலோயா விவேகானந்த மகா வித்தியாலயத்தில் நாளை(19) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

 பூண்டுலோயா விவேகானந்த மகா வித்தியாலய அதிபர் ஆறுமுகம் ரவீந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள இவ் விழாவில் முன்னதாக , ஒஸ்கார் நிறுவிய 

 சுவாமி விவேகானந்தர் மற்றும் சுவாமி விபுலாநந்தர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்துதல் இடம்பெறும்.

 மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளாக சுவாமி விபுலாநந்தரின் வெள்ளைநிற மல்லிகையோ…என்ற பாடல் மற்றும் மாணவியின் சிறப்புப் பேச்சும் இடம்பெறவுள்ளன.

​நட்சத்திர அதிதியாகிய 

 ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி திரு. வி. ரி. சகாதேவராஜா  சுவாமி விபுலாநந்தரின் வாழ்வு மற்றும் தமிழ்த் தொண்டு குறித்து சிறப்புச் சொற்பொழிவாற்றவுள்ளார்.

விழாவின் பிரதம அதிதியாக, அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த ஒஸ்கார் (AusKar) அமைப்பின் முன்னாள் தலைவரும், சுவாமிகளின் சிலைகளை கடந்த வருடம் நிறுவுவதற்கு முன்னின்று உழைத்தவருமான கந்தசாமி பத்மநாதன்( ராஜன்)  கலந்துகொண்டு சிறப்பிப்பார்.

சிரார்த்த தினத்தையொட்டி காரைதீவைச் சேர்ந்த லண்டனில் வாழும் பாஸ்கரன் உதயன்  அவர்களின் அனுசரணையுடன் நலிவடைந்த ஒரு தொகுதி பூண்டுலோயா மக்களுக்கான புது வஸ்திரங்கள்  வழங்கி வைக்கப்படவுள்ளன.