ஈரானின் மிக பெரிய இராணுவ ஆயுதக்கிடங்கை குறிவைத்து 2,000 கிலோ எடையுள்ள பங்கர் – பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், பலப்படுத்தப்பட்ட மற்றும் நிலத்தடி கட்டமைப்புகளை ஊடுருவும் வகையில் வடிவமைக்கப்பட்ட 2,000 பவுண்டு எடையுள்ள பதுங்குகுழி தகர்ப்பு குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பல ஊடுருவும் வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலானது, ஈரானின் மிகப்பெரிய ஆயுதக் கிடங்கான இஸ்ஃபஹான் மீது நடத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 2,000 கிலோ பங்கர் – பஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்க விமானப் படை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் மத்திய பகுதியில் தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கில் அமைந்துள்ள இஸ்ஃபஹான் கிடங்கு, இராணுவம் மற்றும் அணுத் திட்டங்களுக்கு முக்கியப் பங்கு வகித்து வருகின்றது.
சமீபத்திய வாரங்களில் இஸ்பஹான் ஒரு முக்கிய இராணுவ மற்றும் அணுசக்தி மையமாக உருவெடுத்துள்ளது.
நிலத்தடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்
500 கிலோவுக்கும் அதிகமானதாக மதிப்பிடப்பட்ட, அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பின் சில பகுதிகளை ஈரான் இஸ்ஃபஹான் நகரில் உள்ள நிலத்தடி பகுதிகளுக்கு மாற்றியிருக்கலாம் என்று உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஈரானிடம் உள்ள 540 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம், இஸ்ஃபஹான் நகரில் நிலத்தடியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக இஸ்ஃபஹான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தியிருக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் காரணமாக தொடர்ச்சியான வெடிப்புகளையும் அடர்த்தியான புகை மண்டலங்களையும் காட்டும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. மத்திய கிழக்கு முழுவதும் பதற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
முன்னதாக, துபாய் கடற்கரைக்கு அருகே ஒரு எண்ணெய் கப்பலை ஈரான் குறிவைத்ததாக கூறப்படுகிறது, இது உலகளாவிய எரிசக்தி விநியோகப் பாதைகளில் ஏற்படும் இடையூறுகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
